டெல்லி வன்முறை: போலீசார் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு உற்சாக வரவேற்ப்பு அளித்த கும்பல்

டெல்லி வன்முறையின் போது ஒரு நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட புகைப்படம் வைரலானது.

Update: 2022-05-27 08:06 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியில் 2020 பிப்ரவரி 24-ம் தேதி குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறையின் போது மஜுபூர் பகுதியில் வன்முறை நடந்தது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை நோக்கி சிவப்பு நிற டீசர்ட் அணிந்து வந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். போராட்டக்காரர்கள் நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீசார் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ, புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச்சூட்டு நடத்தியது ஷாரூக் பதான் என்ற நபர் என்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஷாரூக்கை உத்தரபிரதேச மாநிலம் பரோலியில் 2020 மார்ச் 3-ம் தேதி டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷாரூக் பதான் மீது வன்முறையை தூண்டுதல், போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே தனது 65 வயதான தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை சந்திக்க அனுமதி அளிக்கும்படியும் டெல்லி கோர்ட்டில் ஷாரூக் பதான் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மனிதாபிமான அடிப்படையில் ஷாரூக் பதான் 4 மணி நேரம் தனது தந்தையை சந்திக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், கோர்ட்டு அனுமதியையடுத்து ஷாரூக் பதான் கடந்த திங்கட்கிழமை வட-கிழக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். அப்போது, ஷாரூக் வீடு இருந்த பகுதியில் வசித்துவரும் அக்கம்பக்கத்தினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஷாரூக்கை வரவேற்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். கும்பலாக இணைந்து சிலர் ஷாரூக்கிடம் கை குலுக்கவும் முற்பட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.






Tags:    

மேலும் செய்திகள்