பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி

மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய கோரும் பா.ஜனதாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

Update: 2023-09-14 18:45 GMT

பெங்களூரு:

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நில பிரச்சினையில் சிக்கியுள்ள மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்யுமாறு பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு பா.ஜனதா ஆட்சியில் இத்தகைய வழக்குகள் வந்தபோது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை. டி.சுதாகர் தனிப்பட்ட முறையில் நிலம் வாங்கவில்லை.

நிலம் வாங்கிய நிறுவனத்தில் அவர் ஒரு இயக்குனராக உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த நில பிரச்சினை இப்போது எழுப்பப்படுகிறது. நில பிரச்சினைக்கு உள்ளான பெண்ணின் வீட்டிற்கு பா.ஜனதாவினா் இப்போது சென்றுள்ளனர். முன்பே அவர்கள் சென்று இருக்க வேண்டும். மந்திரியாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி மீது ஒரு பெண் பாலியல் புகார் கூறினார்.

அந்த வழக்கில் அவரை கைது செய்யாமல் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் பல முறை வலியுறுத்தியும் அவரை பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகே ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா செய்தார். அதே போல் காண்டிராக்டர் தற்கொலையில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஈசுவரப்பாவை கைது செய்யவில்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்