ரூ.20 ஆயிரம் கோடி யாருடைய பணம்..? - கேள்வி எழுப்பிய ராகுல்காந்திக்கு பா.ஜனதா கண்டனம்

அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.

Update: 2023-04-04 23:49 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்போது, அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் உடன் சென்றனர். அப்படி சென்றது, நீதித்துறை மீது அழுத்தம் செலுத்தும் முயற்சி என்று பா.ஜனதா விமர்சித்தது.

இந்நிலையில், ராகுல்காந்தி நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர், ''கட்சி தலைவர்கள் புடைசூழ கோர்ட்டுக்கு சென்றது, நீதித்துறைக்கு அழுத்தம் தரும் முயற்சி என்று பா.ஜனதா கூறுகிறதே?'' என்று கேட்டார்.

பினாமி பணம்

உடனே, ராகுல்காந்தி அந்த பத்திரிகையாளரை நோக்கி திரும்ப நடந்து வந்தார். அவரை பார்த்து, ''பா.ஜனதா சொல்வதையே நீங்களும் எப்போதும் சொல்வது ஏன்? ஒவ்வொரு தடவையும் பா.ஜனதா சொல்வதையே நீங்கள் சொல்கிறீர்கள்'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ''மிகவும் எளிமையான கேள்வி. அதானியின் போலி கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி, யாருடைய பணம்? அது பினாமி பணம். அந்த பணத்துக்கு சொந்தக்காரர் யார்?'' என்றார். அத்துடன் தனது 'டுவிட்டர்' பதிவில், ''பிரதமர் மோடி ஏன் மவுனம் சாதிக்கிறார்? ஏன் பயப்படுகிறார்?'' என்று ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

பா.ஜனதா கண்டனம்

இதற்கிடையே, பத்திரிகையாளரிடம் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி செய்தித்தொடர்பாளர் அனில் பலுனி கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை ராகுல்காந்தி மீண்டும் தாக்கி உள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், ஊடகங்களையும் இழிவுபடுத்துவது அவரது மனப்பான்மை.

ஜனநாயக கட்டமைப்பை அடிக்கடி தாக்குவதில் தனது பாட்டியை அவர் பின்பற்றி வருகிறார். அவர் ஒரு ஆணவம் பிடித்த பரம்பரை என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்