சாட்சி மரணம் என சி.பி.ஐ. கூறிய பெண் கோர்ட்டில் ஆஜர்; பரபரப்பு சம்பவம்

பீகாரில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மரணம் அடைந்து விட்டார் என சி.பி.ஐ. கூறிய சாட்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-05 13:39 GMT



முசாபர்பூர்,



பீகாரில் பிரபல இந்தி தினசரி பத்திரிகையான இந்துஸ்தானில் சிவான் நகர தலைமை பத்திரிகையாளராக இருந்தவர் ராஜ்தேவ் ரஞ்சன். இவரை சிவான் நகரில் உள்ள பரபரப்பான ஸ்டேசன் சாலை அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கடந்த 2017ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ரஞ்சன் பின்னர் உயிரிழந்து விட்டார். இந்த கொலையில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான சகாபுதீன் மற்றும் தேஜ் பிரதாப் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என கூறி ரஞ்சனின் மனைவி எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோரினார்.

இதன் மீது நடந்த விசாரணையில், முகமது சகாபுதீனை சி.பி.ஐ. விசாரணை காவலில் எடுத்தது. எனினும், 2018ம் ஆண்டு மார்ச்சில் தேஜ் பிரதாப்புக்கு இவ்வழக்கில் தொடர்பு இல்லை என கூறி சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுவித்தது.

இந்நிலையில், வழக்கின் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடந்து வந்தது. இதில், வழக்கின் சாட்சிகளில் ஒருவரான பதமி தேவி என்ற மூதாட்டி மரணம் அடைந்து விட்டார் என சி.பி.ஐ. அறிக்கை அளித்திருந்தது.

ஆனால், சிவில் நீதிமன்றத்தில் பதமி தேவி நேரில் ஆஜரானார். அவர் நீதிபதியிடம் ஐயா, நான் உயிருடனேயே இருக்கிறேன். நான் மரணம் அடைந்து விட்டேன் என சி.பி.ஐ.யின் அறிக்கை அறிவிக்கிறது. இது நன்றாக திட்டமிடப்பட்ட சதி என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதன்பின், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் அட்டையை காட்டி தனது அடையாளங்களை அவர் உறுதிப்படுத்தினார்.

வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் சரத் சின்ஹா வாதிடும்போது, பதமி தேவி வழக்கின் முக்கிய சாட்சி. மே 24ந்தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. அமைப்பின் மிக பெரிய கவன குறைவு இது. நாட்டின் மிக பெரிய விசாரணை அமைப்பு இதுபோன்று நடந்து கொண்டால் என்ன செய்வது? என சின்ஹா கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யிடம் விளக்கம் கேட்டு, நீதிமன்றம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்