பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை: 1,177 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு 1,177 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியான 2 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-20 17:08 GMT

பெங்களூரு:

1,177 வீடுகளுக்குள் தண்ணீர்

பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெங்களூரு மாநகராட்சியின் எலகங்கா, மகாதேவபுரா மண்டலங்களில் கனமழை பெய்ததால், ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கனமழைக்கு சிவில் என்ஜினீயர் மற்றும் மூதாட்டி பலியாகி இருந்தார்கள். இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

இந்த கணக்கெடுப்பின்போது மகாதேவபுரா மண்டலத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டும் 1,068 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இதுபோல், எலகங்கா மண்டலத்தில் 109 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,177 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு உண்டாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இதுபற்றிய அறிக்கையை மாநகராட்சி அதிகாரிகளிடம், ஊழியர்கள் வழங்கி உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து பலியான முனியம்மா மற்றும் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட என்ஜினீயர் மிதுன் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்