கர்நாடகத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு மும்பையில் புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது

கர்நாடகத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு மும்பையில் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-02 14:01 GMT

மும்பை, 

கர்நாடகத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு மும்பையில் புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளநோட்டுகள்

மும்பை தாதர் பூ மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வியாபாரி ஆனந்த் குமார் என்பவரிடம் இருந்து பணம் வந்தது. இதனை எண்ணிப்பார்த்த போது அதில் சில கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் கள்ளநோட்டு வழங்கிய ஆனந்த் குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.1,200 இருந்ததை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கர்நாடகத்தில் அச்சிட்டு..

இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிவ்சங்கர் என்பவர் புழக்கத்தில் விடுவதற்காக தன்னிடம் கள்ளநோட்டுகள் கொடுத்ததாக தெரிவித்தார். இதன்பேரில் போலீஸ் தனிப்படை கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்துக்கு விரைந்தனர். அங்கு ஹும்னாபாத்தை சேர்ந்த சிவ்சங்கர், சாலை ஒப்பந்ததாரர் கிரண்காம்ளே (24) உள்பட 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் அங்கு கள்ளநோட்டு அச்சிட்டு மராட்டியத்தில் மும்பை, சோலாப்பூர் பகுதிகளில் வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது. கள்ளநோட்டுகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதற்காக இரவு நேரத்தில் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் புழக்கத்தில் விட்டு வந்து உள்ளனர்.

4 பேர் கைது

இந்த சம்பவத்தில் பிடிபட்ட மும்பை வியாபாரி ஆனந்த் குமார், ரூ.1 லட்சம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட ரூ.25 ஆயிரம் கமிஷன் பெற்று வந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கர்நாடகத்தில சிக்கிய 3 பேரையும் மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-------------

Tags:    

மேலும் செய்திகள்