உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் இளம்வீரர் அகில் ஷியோரன் தங்கம் வென்றார்

மெக்சிகோவில் நடந்த ஆடவர்களுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளம்வீரர் அகில் ஷியோரன் தங்க பதக்கம் வென்றுள்ளார். #WorldCupShooting;

Update:2018-03-11 11:17 IST

புதுடெல்லி,

மெக்சிகோ நாட்டின் குவாடலஜாரா நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது.  இதில் ஆடவர்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அகில் ஷியோரன் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார்.

அதற்கு முன் நடந்த தகுதி சுற்றில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புத் 1176 புள்ளிகளுடன் 2வது இடம் பெற்றார்.  ஷியோரன் 1174 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், மற்றொரு இளம்வீரரான சுவப்னில் குசாலே தனது முதல் உலக கோப்பை போட்டியில் 1168 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் இருந்தனர்.  மொத்தம் 8 பேர் கொண்ட இறுதி போட்டிக்கு 3 இந்தியர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இறுதி சுற்றில் 455.6 புள்ளிகள் பெற்று ஷியோரன் முதல் இடத்திற்கு முன்னேறி தங்க பதக்கத்தினை தட்டி சென்றார்.  அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரியா நாட்டின் பெர்ன்ஹார்டு பிகல் 452 புள்ளிகளுடன் 2வது இடத்தினை பெற்றார்.

மேலும் செய்திகள்