ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்க முடிவு செய்த போலந்து வீராங்கனை

போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா அன்ட்ரிசெக் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார்.

Update: 2021-08-21 12:31 GMT
வார்சா,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த மரியா அன்ட்ரிசெக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இது அவரது முதல் ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இருப்பினும் இந்த பதக்கத்தை அவர் ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார்.

அவரது இந்த முடிவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதன் பின்னால் இருக்கும் காரணம் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த மிலோசெக் மலைசா என்ற 8 மாத ஆண் குழந்தைக்கு இதய நோய் பாதிப்பு உள்ளது. உயிருக்காக போராடும் அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட நிலையில், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மருத்துவமனை குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது.

ஆனால் இதற்கான செலவு 3 கோடி ரூபாய் வரை ஆகும் நிலையில், குழந்தையின் பெற்றோரால் பாதியளவு நிதியை மட்டுமே திரட்ட முடிந்தது. இந்த நிலையில் உயிருக்கு போராடும் அந்த குழந்தையை காக்க, தன் வாழ்நாள் சாதனையான ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்கும் முடிவிற்கு வந்துள்ளார் மரியா. அவரது இந்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் செய்திகள்