ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டி; இந்திய மகளிர் ரிகர்வ் குழுவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் இந்திய மகளிர் ரிகர்வ் குழு வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

Update: 2021-11-19 10:08 GMT


டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன.  இன்று நடந்த மகளிர் ரிகர்வ் குழு போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.  மகளிர் ரிகர்வ் இறுதி போட்டியில், இந்திய அணியின் அங்கிதா பகத், ரிதி போர் மற்றும் மது வேத்வான் ஆகியோர் தென்கொரியாவை சேர்ந்த ரியூ சூ ஜங், ஹோ யெஜின் மற்றும் லிம் ஹியேஜின் ஆகியோர் கொண்ட அணிக்கு எதிராக விளையாடினர்.  இதில், 6-0 என்ற புள்ளி கணக்கில் கொரிய அணி வென்றது.  இதனால், இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

நேற்று நடந்த ஆடவர் தனிநபர் இறுதி போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கம் வென்றார்.  மகளிர் தனிநபர் இறுதி போட்டியில் 25 வயதுடைய இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், முன்னாள் உலக சாம்பியனான கொரிய வீராங்கனை ஹோ யூஹியுன் என்பவரை 146-145 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

இதேபோன்று, நேற்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் வெள்ளி பதக்கம் வென்றது.  ஜோதி சுரேகா ஒரே நாளில் இரு பதக்கங்களை பெற்று தந்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

அதற்கு முன் நடந்த ஆடவர் குழு போட்டி ஒன்றில் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கம் வென்றார்.  இதனால், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அபிஷேக்கிற்கு 2 பதக்கங்கள் கிடைத்தன.

மேலும் செய்திகள்