உஷாரய்யா உஷாரு

அவர் ஆசிரியராக வேலைபார்த்தவர். 75 வயதை தாண்டியவர். இப்போதும் விவசாயத்தை நம்பி இருக்கும் கிராமத்தில் அவர் ஓய்வுகால வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.

Update: 2018-10-14 11:22 GMT
அவர் ஓரளவு பூர்வீக வசதிகொண்டவர். கிராமத்து ஆசிரியர் என்பதால், அந்த காலத்தில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அக்கம்பக்கத்து நிலங்களையும் குறைந்த விலைக்கு வாங்கிப்போட்டார். அவருக்கு பென்ஷன் பணமும் கைநிறைய கிடைத்துக்கொண்டிருந்தது.

அவர் தனது தாத்தா காலத்து பழைய வீட்டில் வசித்துவந்தார். வயதான அந்த வீடு விசாலமாக கட்டப்பட்டது. அறை அறையாக இருட்டடைந்துபோய் காணப்படும். ஆங்காங்கே, இதோ இடிந்துவிழப் போகிறேன் என்பதுபோல் சில சுவர்கள் இருக்கின்றன. புதிதாக அந்த வீட்டிற்குள் ‘பேன்கள்’ மட்டுமே அறிமுகமாகியிருந்தன. வாஷிங் மெஷின், பிரிட்ஜ்கூட கிடையாது. அப்பா பயன்படுத்திவிட்டு, இவரிடம் கொடுத்துவிட்டுப்போன சைக்கிள் ஒன்று இருக்கிறது. அவர் ஆசிரியராக பணியாற்றியபோது பள்ளிக்கு அதில்தான் சென்றார். தற்போதும் தனது கிராமத்தில் இருந்து, பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு அந்த சைக்கிளை ஓட்டிக்கொண்டுதான் சென்றுகொண்டிருந்தார். பழைய வீட்டில் வசிப்பது, சைக்கிளில் பயணிப்பது போன்றவைகளை எல்லாம் பார்த்துவிட்டு அந்த பகுதி மக்கள் அவரை எளிமையான வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக கூறிக்கொண்டிருந்தார்கள்.

அவருக்கு ஒரே ஒரு மகன். அவன் சிறுவனாக இருந்தபோதே அவனது அம்மா இறந்துபோனார். அந்த எளிமையான ஆசிரியர்தான் மகனை வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்துவைத்தார். அவனை ஒரு வாயில்லாபூச்சி போல் வளர்த்து வைத்திருந்தார். அவனது மனைவி அருகில் உள்ள நகரத்தை சேர்ந்தவள். தனது பிறந்த வீட்டில் சொகுசாக வாழ்ந்த அவள், மாமனார் வீட்டில் எந்த சவுகரியமும் இல்லாமல் மிகவும் நொந்துபோய் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அன்று சைக்கிளில் தனது தென்னந்தோப்பை பார்க்க சென்ற வாத்தியார், சில மணி நேரம் கழித்து சோர்ந்து போய் வீடு திரும்பினார். அவருக்கு வியர்த்து வழிந்தது. தனக்கு நெஞ்சுவலிப்பதாக மருமகளிடம் கூறினார். அது மதிய நேரம். கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் இல்லை. அவளுக்கு கார் ஓட்டத் தெரியும். ஆனால் அங்கு கார் வைத்திருப்பவர்கள் எல்லாம், காரை ஓட்டிக்கொண்டு அவரவர் வேலைக்கு சென்றுவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியாத மருமகள், வெளியூரில் இருந்த கணவருக்கு விஷயத்தை கூறிவிட்டு, ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொன்னாள். அது நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்து சேருவதற்குள், அவர் உடல் நிலை மோசமாகிவிட்டது. அவசர அவசரமாக ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தபோது டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ‘வரும் வழியிலே அவர் உயிர் பிரிந்துவிட்டது’ என்றார்கள்.

கிராமமே சோகத்தில் மூழ்கியது. அவர் பலருக்கும் தெரிந்தவர் என்பதால், அவருக்கு அஞ்சலி செலுத்த பெருமளவு மக்கள் கூடினார்கள். அவரது பெரிய தோட்டம் ஒன்றுக்குள்ளேயே அவர் உடலை அடக்கம் செய்தனர்.

இரண்டு நாட்கள் கழிந்திருந்தன. மருமகளின் தோழி ஒருத்தி நகரத்தில் வசித்து வருகிறாள். அவள் விஷயத்தை கேள்விப்பட்டு, துக்கம் விசாரிக்க வந்தாள். வந்தவள் தனது தோழி, மாமனார் இறந்து போன துக்கமே இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து லேசாக அதிர்ந்துபோய், ‘ஊரே உன் மாமனார் எளிமையின் உதாரணம் என்றுகூறி, இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீளாமல் இருக்கிறது. நீயோ ஜாலியாக இருக்கிறாயே!’ என்று கேட்டாள்.

‘அட நீ ஒண்ணு.. இந்த கிராமத்துக்காரங்க உண்மை தெரியாமல் அவரை எளிமையான மனிதர் என்று புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் அவர் பேராசை பிடித்த வாழத் தெரியாத மனிதர். ெபாக்கிஷத்தை காக்கும் பாம்புபோல் வாழ்ந்து, செத்துவிட்டார். அவர் மீதி காலத்தை சவுகரியமாக கழிக்கட்டும் என்று நினைத்து, தண்ணீரில் ஊறிப்போய் காணப்படும் இந்த பழமையான வீட்டை இடித்துவிட்டு புதிய பங்களா கட்டி, அதில் ஏ.சி. வசதி எல்லாம் செய்யலாம் என்று நினைத்தோம். எனக்கு கார் ஓட்டத் தெரியும். அவருக்கு வயதாகிவிட்டதால், சவுகரியமாக வெளியே அழைத்துச்செல்ல ஒரு கார் வாங்கலாம் என்றும் திட்டமிட்டோம்.

இதை எல்லாம் என் மாமனாரிடம் போய் என் கணவர் சொன்னபோது அவர், ‘இதெல்லாம் உன் மனைவி கொடுத்த ஐடியாவாகத்தானே இருக்கும். என்னை பொறுத்தவரையில் அவள் யாரோ ஒருத்தி. அவள் என் சொத்தை எல்லாம் அனுபவிக்க திட்டம்போடுகிறாள். அவளுக்கு பங்களாவீடு வேணும், ஏ.சி.வேணும், கார் வேண்டும் என்றால், அவள் அப்பன்கிட்டே போய் கேட்க சொல்லு. என் சொத்தை அவள் அனுபவிக்க விடமாட்டேன். ஆசைகாட்டி என்னை ஏமாத்திட முடியாதுன்னு உன் பொண்டாட்டிக்கிட்டே போய் சொல்லு’ என்று முகத்தில் அடித்ததுபோல் பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.

தானும் அனுபவிக்காமல், மற்றவர்களை அனுபவிக்கவும் விடாமல் ஓட்டை சைக்கிளை ஓட்டிய அவரை எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தான் சேர்த்துவைத்ததை அவருக்கு அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. கார் மட்டும் வாங்கிக்கொடுத்திருந்தாலாவது அவரை கடைசி நேரத்தில் நானே காரில் ஏற்றி, வேகமாக மருத்துவமனைக்காவது கொண்டு போய் காப்பாற்றி இருப்பேன்” என்றவள், தனது மாமனாரின் வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து, தோழியிடம் நீட்ட, அதை பார்த்த அவளுக்கு தலை சுற்றாத குறை. அவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

நீங்களும் இதே மாதிரி, பொக்கிஷத்தை பாதுகாக்கும் பாம்பு மாதிரி வாழ்ந்து விடக்கூடாதுங்கிறதுக்காக இதை உங்க காதுலேயும் போட்டு வைக்கிறோம்.. அவ்வளவுதான்!

- உஷாரு வரும். 

மேலும் செய்திகள்