புதன் கிரகத்தை ஆராயச் செல்லும் இரட்டை விண்கலன்கள்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தை ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் ஜப்பானிய விண்வெளி அமைப்பும் சேர்ந்து இரட்டை விண்கலங்களை அனுப்புகின்றன. இந்த இரு விண்கலங்களும் புதன் கிரகத்துக்குப் போய்ச் சேரும் வரை ஒரே விண்கலம் போலச் செல்லும்.

Update: 2018-10-15 12:09 GMT
புதன் கிரகத்தை அடைந்த பிறகு இவை தனித்தனியே பிரிந்து கொள்ளும். பெபி கொலம்போ என்னும் பெயர் கொண்ட இந்த விண்கலம் இம் மாதம் 20-ந் தேதியன்று தென் அமெரிக்காவில் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்குச் சொந்தமான விண்வெளிக் கேந்திரத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படும். இந்த ராக்கெட் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்குச் சொந்தமானது. ஜுசாப்பே பெபிகொலம்போ என்ற இத்தாலிய விஞ்ஞானியின் பெயர் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

கணித மேதையான அவர் தான் புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலம் போய்ச் சேருவதற்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர்.புதன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 5 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியானது சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புதன் கிரகத்துக்கு ஒரு விண்கலம் போய்ச் சேர தனி உத்தி தேவை. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் உள்ளதால், புதனுக்குச் செல்லும் விண்கலம் சூரியன் இருக்கும் திசையை நோக்கிச் செல்வதாக இருக்கும். சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் என்பதால் விண்கலம் அதிக வேகம் பெறும். இதைக் குறைத்தால் தான் புதன் கிரகத்தை அடைய முடியும். இப்படிக் குறைத்தால் அது புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும். இல்லாவிட்டால் விண்கலம் புதன் கிரகத்தைத் தாண்டிச் சென்று விடும். பெபி கொலம்போ விண்கலம் பூமியிலிருந்து கிளம்பிய பிறகு சூரியனை சுற்றி விட்டு வந்து பூமியை எதிர்ப்புறமாகக் கடந்து செல்லும். அதாவது பூமியின் சுழற்சிக்கு எதிர்ப்புறமாக கடந்து சென்றாக வேண்டும். அப்போது விண்கலத்தின் வேகம் குறையும். பின்னர் அது சூரியனை மறுபடி சுற்றி விட்டு வெள்ளி கிரகத்தை இதே போல எதிர்ப்புறமாக மிக நெருக்கமாக கடந்து செல்லும். பிறகு சூரியனை சுற்றி விட்டு மீண்டும் வெள்ளி கிரகத்தைக் கடந்து செல்லும். இதன் மூலம் விண்கலத்தின் வேகம் கணிசமாகக் குறையும். அடுத்து ஆறு தடவை சூரியனைச் சுற்றும். அப்போது ஒவ்வொரு தடவையும் அது புதன் கிரகத்தைக் கடந்து செல்லும், இறுதியில் 2025-ம் ஆண்டில் வேகம் மேலும் குறைந்து புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி புதன் கிரகத்தைச் சுற்றத் தொடங்கும். பெபிகொலம்போ இப்படிச் சென்றால் தான் அதன் வேகம் உகந்த அளவுக்குக் குறைக்கப்பட்டு புதனை நிலைத்துச் சுற்ற முடியும்,

பூமியிலிருந்து கிளம்பிய பிறகு பெபி கொலம்போ விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் அளவில் இருக்கும்.அது பூமி, வெள்ளி, புதன் கிரகங்களை மேலே சொன்னபடி எதிர்ப்புறமாகக் கடந்து சென்று புதன் கிரகத்தை எட்டும் போது அதன் வேகம் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டராக குறைந்து விட்டிருக்கும். இந்த விண்கலம் சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கும் வகையில் விசேஷ பூச்சு கொண்டிருக்கும். அத்துடன் வெப்பத் தடுப்பு கேடயத்தையும் பெற்றிருக்கும்.இதற்கு முன்னர் அமெரிக்க நாசா அனுப்பிய மாரினர் 10 விண்கலமும் (1974) மெசஞ்சர விண்கலமும் (2011) புதன் கிரகத்தை ஆராய்ந்து தகவல்களை அனுப்பின.

இப்போது புதன் கிரகத்தை சுற்ற இருக்கும் இரு விண்கலங்களில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்கலம் பெரியது. அதன் எடை 1230 கிலோ கிராம். ஜப்பானிய விண்கலம் சிறியது. அதன் எடை 255 கிலோ கிராம். இரண்டுமே புதன் கிரகத்தை மேலிருந்து கீழாகச் சுற்றும், எனினும் இரண்டும் வெவ்வேறு உயரங்களில் நீள் வட்டப் பாதையில் புதன் கிரகத்தைச் சுற்றி வரும். ஐரோப்பிய விண்கலத்துடன் ஒப்பிட்டால் ஜப்பானிய விண்கலம் புதன் கிரகத்திலிருந்து அப்பால் இருக்கும்.ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்கலம், ஜப்பானிய விண்கலம் ஆகிய இரண்டுமே புதன் கிரகத்தை ஓராண்டுக் காலம் ஆராயும். அவசியமானால் ஆய்வுக் காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்படும். ஐரோப்பிய விண்கலத்தில் மொத்தம் 11 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றிருக்கும்.இவை ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகளும் தயாரித்து அளித்தவை. ஜப்பானிய விண்கலத்தில் ஐந்து கருவிகள் இருக்கும்.ஐரோப்பிய விண்கலத்தைப் பொறுத்த வரையில் அதன் ஆய்வுகள் மிக விரிவாக இருக்கும். அந்த ஆய்வுகளில் கீழ்க்கண்ட விஷயங்கள் அடங்கியிருக்கும்.

சூரியனுக்கு மிக அருகில் புதன் போன்ற சிறிய கிரகம் அமைய நேர்ந்தது எப்படி?புதன் கிரகத்தின் அமைப்பு, அதன் உட்புறம் எத்தகையது. அதன் பாறைகள் புதன் கிரகத்தில் மிச்ச மீதியாக உள்ள வாயு மண்டலம். ஜப்பானிய விண்கலத்தைப் பொறுத்த வரையில் புதன் கிரகத்தின் காந்த மண்டலத்தை விரிவாக ஆராயும். காந்த மண்டலம் எவ்விதம் தோன்றியிருக்கும் என்றும் ஆராயும் புதனுடன் ஒப்பிட்டால் சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் காந்த மண்டலம் கிடையாது, சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் தான் மிகவும் சிறியது. புதன் கிரகத்தின் குறுக்களவு 4878 கிலோ மீட்டர். இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் குறுக்களவு 12,742.கிலோ மீட்டர்.

-என். ராமதுரை, அறிவியல் எழுத்தாளர்

மேலும் செய்திகள்