உஷாரய்யா உஷாரு..

அவளுக்கு 24 வயது. கிராமத்து பெண். அழகானவள். அழகு, தனது வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் சோகத்தை ஏற்படுத்திவிட்டதாக அவள் சொல்கிறாள்.

Update: 2018-10-28 11:33 GMT
தற்போது அழகே ஆபத்தையும், குற்ற உணர்வையும் தோற்றுவிக்க மிகுந்த கவலையோடு இருந்துகொண்டிருக்கிறாள். தனது சோக கதையை அவளே சொல்கிறாள்:

“எனக்கு நினைவுதெரிந்த நாளில் இருந்து எனது தாயும், தந்தையும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். எனது தந்தை வயோதிகர் போன்று நோஞ்சானாக இருப்பார். நான் அழகாக பிறந்ததால், எனது அம்மா மீது அப்பாவுக்கு சந்தேகம். அதனால் திடீரென்று ஒருநாள் என்னையும், தாயையும் புறக்கணித்துவிட்டு எங்கோ போய்விட்டார். அந்த மனவேதனையில் அம்மா என்னை கொண்டுபோய் கன்னியாஸ்திரிகள் அமைப்பு ஒன்றில் சேர்த்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

அவர்கள் என்னை படிக்கவைத்து பாதுகாத்தார்கள். நான் பிளஸ்-டூ படித்து முடித்ததும், அவர்கள் அமைப்பு சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலைவாங்கித் தந்தார்கள். பின்பு நான் வேலைபார்த்த இடத்தில், என்னை விரும்பிய ஒருவருக்கு எளிமையாக திருமணமும் செய்துவைத்தார்கள்.

நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். ஒரு குழந்தையும் பிறந்தது. பின்பு என் கணவர் கூடுதலாக படித்து, இன்னொரு பிரபலமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஓரளவு நல்ல சம்பளம் வந்துகொண்டிருந்தது. அதனால் நான் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஒரு நாள் அவர் வேலைமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்துபோனார்.

பின்பு என் கணவர் வேலைபார்த்த அதே நிறுவனத்தில், கருணை அடிப்படையில் என்னை சாதாரண வேலை ஒன்றில் சேர்த்துக்கொண்டார்கள். விதியை நொந்தபடி அந்த வேலையில் நான் தொடர்ந்துகொண்டிருந்தபோது, அங்கு மேனேஜராக இருந்த நடுத்தர வயதுக்காரர் என்னை அணுகி, ‘அவருடைய மனைவி இறந்துவிட்டதாகவும், அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், என்னை மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும்’ சொன்னார். நான் அவரிடம், ‘இனி நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. என் கணவர் நினைவாகவே காலம்முழுக்க வாழ்ந்துவிடப்போகிறேன்’ என்றேன். உடனே அவர், ‘உன்னை எப்படி சம்மதிக்கவைப்பது என்று எனக்கு தெரியும்’ என்றார். என்னை சிக்கவைக்க மிகப்பெரிய சதித்திட்டம் ஒன்றை உருவாக்கி வைத்திருந்திருக்கிறார்.

அவருக்கு எங்கள் அலுவலகத்திலே நெருக்கமான தோழி ஒருத்தி உண்டு. அவள் என்னிடமும் நன்றாக பேசுவாள். அன்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அலுவலக விடுமுறை வந்தது. எல்லோரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். எனக்கு சுற்றுலாவுக்கு செல்ல விருப்பமில்லை. ஆனால் அந்த தோழி என்னை கட்டாயப்படுத்தி அழைத்தாள். நான், என் மாமியாரிடம் சொன்னபோது, ‘குழந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன். நீ போய் வா..’ என்றார். அதனால் நான் சென்றேன்.

நாங்கள் சென்ற இடம் குளிர்பிரதேசம். அங்குள்ள சீதோஷ்ண நிலையும், தொடர் பயணமும் என்னை பாதித்தது. முதல் நாள் எப்படியோ சமாளித்துவிட்டேன். மறுநாள் காலையில் எல்லோரும் வெவ்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க ஜாலியாக கிளம்பினார்கள். என் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அறையிலே இருந்துவிட்டேன். நான் மட்டுமே அங்கு தனியாக இருப்பதாக நினைத்தேன். ஆனால் என் தோழி மூலம் தகவல் பெற்று, அந்த மேனேஜரும் உடல் நிலை சரியில்லை என்று கூறி ஓய்வெடுத்திருக்கிறார். அது எனக்கு தெரியாது.

வெகுநேரம் அறையில் அடைப்பட்டுக்கிடக்க போரடித்ததால், அங்கிருந்து வெளியேறி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்த சிறிய அருவி ஒன்றை நோக்கி நடந்தேன். அருவி சலசலத்து செல்லும் பெரிய பாறை ஒன்றின் மேல் போய் அமர்ந்தேன். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை. அப்போது திடீரென்று சிரித்துக்கொண்டே அந்த மேனேஜர் என் அருகில் வந்து அமர்ந்ததும் எனக்கு திக்கென்றது. நான் இறங்கி நழுவ முயன்றபோது அவர், ‘இதை மட்டும் பார்த்துவிட்டுப் போ’ என்று, அவரது செல்போனில் இருந்த காட்சியை ஓடவிட்டார். முந்தைய நாள் நான் அறையில் குளித்தது, உடை மாற்றியது எல்லாம் அதில் வீடியோவாக ஓடியது. அதில் ஒருசில நிமிடங்கள் நான் ஆடையின்றி நின்றிருந்த காட்சியும் இடம் பெற்றிருந்தது. என்னுடன் தங்கிய அந்த தோழி அவருக்காக அதை பதிவு செய்திருக்கிறாள் என்பது என்னை திடுக்கிடவைத்தது.

வசமாக மாட்டிக்கொண்டோமே என்று நிலை குலைந்துபோய் உட்கார்ந்திருக்க அவர், ‘நீ எனக்கு நிரந்தரமாக மனைவியாக வேண்டும் அல்லது இன்று ஒரு நாளாவது மனைவியாக இருக்கவேண்டும். வா அறைக்கு செல்லலாம்..’ என்றார். அவரது கண்களில் வெறித்தனம் தெரிந்தது. அந்த செல்போன் அவர் கையில் இருக்கும் வரை எனது கற்புக்கு ஆபத்து என உணர்ந்து, சட்டென்று அதை நான் தட்டிப்பறிக்க முயற்சித்தேன். அவர் தடுக்கும் விதத்தில் விலக, அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். அது பள்ளமான பகுதி. அவர் விழுந்த வேகத்தில் செல்போன் அருவிக்குள் நழுவிச் சென்றது. என் கண் முன்னே அது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அவர் பாறை இடுக்கில் சிக்கி பலத்த காயத்துடன் துடித்துக்கொண்டிருந்தார்.

அவரை நான் காப்பாற்ற முயற்சித்தால், அவரும் நானும் திட்டமிட்டு தனியாக சந்திக்க ஆள்அரவமற்ற இடத்திற்கு வந்ததுபோல் ஆகிவிடும் என்பதாலும், அவரால் எனக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்படும் என்பதாலும் அவரை அப்படியே விட்டுவிட்டு, எதுவும் அறியாதவளாய் அறையில் வந்து உட்கார்ந்தேன். நடந்ததை நினைத்து பயந்ததால் எனக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. யாருக்கும் என் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

அன்று இரவு முழுக்க அவரை தேடினார்கள். பின்பு யாரோ ஒருவர், அவர் பாறைக்கு அடியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக கூற, கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவர் உடலில் ஒரு பகுதி செயலிழந்து போனது. அவரால் பேசவும் முடியவில்லை.

இப்போது அவரது வீட்டில் படுத்தபடுக்கையாக பராமரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ‘அவர் விழுந்த உடனே நான் கூச்சல்போட்டு உதவி கேட்டிருந்தால், யாராவது வந்து காப்பாற்றி இருப்பார்களே.. அவருக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காதே!’ என்ற குற்ற உணர்வோடு நான் மனதுக்குள் அழுதுகொண்டிருக்கிறேன்..” என்கிறாள்.

கடவுள் இப்படித்தான் சில நேரங்களில் குற்றவாளியை தண்டித்து நல்லவரை காப்பாற்றிவிடுகிறார் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?!

- உஷாரு வரும். 

மேலும் செய்திகள்