பேட்டரி கார்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்

பேட்டரி கார்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-11-14 10:32 GMT
சுற்றுச்சூழலை கெடுக்காத, புகை வெளியிடாத, பேட்டரியில் இயங்கும் கார்களை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி கார்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதை செயல்படுத்தி வருகிறது.

இதன் மூலம் பெட்ரோல், சி.என்.ஜி. உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வாகனத்திலிருந்து பேட்டரி வாகனங்களை வேறுபடுத்திக்காட்ட இது உதவும். சொந்த உபயோக கார்களில் பச்சை நிற நம்பர் பிளேட்டில் வெள்ளை நிற எழுத்துகளைக் கொண்டதாக இருக்கும். வாடகைக் கார்களை இயக்கும் நிறுவனங்கள் (கால் டாக்ஸி) உள்ளிட்டவற்றுக்கு வெள்ளை நிற பின்னணியில் பச்சை நிற எழுத்துகள் இடம்பெறும்.

இந்த பச்சை நிற நம்பர் பிளேட் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் பொருந்தும்.

பேட்டரி வாகனங்களைப் பொருத்தமட்டில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் மட்டுமே பொது உபயோகம் மற்றும் தனி உபயோகத்துக்கான வாகனங்களை தயாரிக்கின்றன.

சலுகைகள்

பேட்டரி வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியம் அளிக்கிறது. அத்துடன் கார் நிறுத்தும் பகுதிகளில் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல நெரிசல் மிகுந்த சாலைகளில் பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கும் நிலையில் பேட்டரி வாகனங்களை மட்டும் அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பர்மிட் வழங்குவதில் சலுகைகளை அளிப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.

இதேபோல 16 வயது முதல் 18 வயது பிரிவினர்கள் பேட்டரி ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே 50 சி.சி.க்கும் குறைவான மொபெட்களுக்கு லைசென்ஸ் தேவையில்லை என்ற விதிமுறை அமலில் உள்ளது போல பேட்டரி ஸ்கூட்டர்களுக்கு லைசென்ஸ் தேவையில்லை என்ற விதியை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்