பெருகி வரும் ‘பாதி பெண் தோழி’ கலாசாரம் : பாதிக்கப்படும் பெண்களின் பரிதாப கதை

இது ஒரு புது கலாசாரம். 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் பல வருடங்களாக ஒன்றாகப் பழகிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, அவர்கள் வாழ்க்கை. ஆனால் அப்படிப்பட்ட சிலரிடம், ‘நீங்கள் நண்பர்களா?’ என்று கேட்டால், இல்லை என்கிறார்கள்.

Update: 2018-11-25 12:00 GMT
‘காதலர்களா?’ என்று கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் பதில் தருகிறார்கள். ‘அப்படியானால் உங்கள் நட்பிற்கும், பழக்கத்திற்கும் என்ன பெயர்?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அப்படி ஜோடியாக பழகும் அவர்கள் இருவரும், காதல் ஜோடியைவிடவும் நெருக்கமான தம்பதிகளைவிடவும் மிக அதிகமான அளவு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். அந்தரங்கமான தகவல்களைக்கூட அலசிக் கொள்கிறார்கள்.

‘சரி, பெயர் சூட்டப்படாத இந்த புதிய கலாசார நட்பில் எல்லாம் நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது. இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லையே’ என்று நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. ஏனென்றால், இத்தகைய நட்பை விட்டு விலக முடியாமலும்- காதலராகவோ, கணவராகவோ அங்கீகரித்து வாழ்க்கையில் சேர்க்க முடியாமலும் பல பெண்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தவிப்பு அவர்கள் பணிசார்ந்த எதிர்காலத்தையும், (திருமணம் போன்ற) வாழ்க்கை சார்ந்த எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

இப்படிப்பட்ட நட்பில் இருக்கும் சில ஜோடிகளை கவுன்சிலிங்கில் சந்திக்க நேர்ந்தது. அவர்களை பற்றி கூறுகிறேன். அவர்கள் இருவருக்கும் சம வயது, 26. வாடா.. போடா.. என்றுதான் பேசிக் கொண்டார்கள். குறிப்பாக அவர்கள் முகத்தில் கவலை எதுவும் தென்படவில்லை. இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் நட்பு எப்படி உருவானது? என்று கேட்டேன்.

அவள்தான் முந்திக்கொண்டு பேசினாள். “எனது ஐந்தாண்டுகால வேலை அனுபவத்தில் நான் ஏராளமான ஆண்களை தொழில் ரீதியாக சந்தித்திருக்கிறேன். அதில் யாருடனும் எனக்கு இனம் தெரியாத பரவசநிலை ஏற்பட்டதில்லை. இவனை முதல் முறையாக கண்ணுக்கு கண் நோக்கியபோது எனக்குள் விளக்க முடியாத உற்சாகம் பொங்கியது. காலையில் ‘வாட்ஸ் அப்’பில் இவனது குட்மார்னிங் மெசேஜை பார்த்தால்தான் எனக்கு விடியும். இவன் மெசேஜ் அனுப்ப தாமதமானால் நானும் படுக்கையில் இருந்து எழ தாமதமாகி விடும். இரவில் எத்தனை வேலைகள் இருந்தாலும் குட்நைட் சொல்லிவிட்டுதான் தூங்குவோம். அலுவலகத்திலும், குடும்பத்திலும் எனக்கு அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். இவனை போய் பார்த்த வினாடியே எனது அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்தது போல் ஆகிவிடும்..” என்றெல்லாம் கண்மூடித்தனமாக சொல்லிக் கொண்டிருந்தாள். கேட்கவே வித்தியாசமாகத்தான் இருந்தது. அத்தனைக்கும் ஆமாம் சொல்வதுபோல் அந்த இளைஞனும் உட்கார்ந்திருந்தான். இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகளாக இந்த புதிய நட்பில் இருக்கிறார்கள்.

தற்போது கவுன்சலிங்குக்கு வந்ததற்கான காரணத்தையும் அவள்தான் சொன்னாள். “எனக்கு பெற்றோர் மூன்று வருடங்களாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் ஏழெட்டு வரனை பார்த்து விட்டேன். அந்த இளைஞர்களோடு தனிமையில் பேச வேண்டும் என்று தனியறைக்கு செல்வோம். பேசுவோம். ஆனால் இவனிடம் ஏற்பட்டது போன்ற பரவசம், அதில் யாரிடமும் ஏற்படவில்லை. அதனால் நான் அவர்களை எல்லாம் நிராகரித்து விட்டேன். இவன், ‘யாராவது ஒரு இளைஞனை திருமணம் செய்து கொள். திருமணத்திற்கு பிறகு அவனை நேசிக்கத் தொடங்கி விடுவாய்’ என்று கூறி, திருமணம் செய்து கொள்ளும்படி என்னை நிர்பந்திக்கிறான். ஆனால் எனக்கு திருமணத்தில் ஆசையே இல்லை. பெற்றோரோ எனக்கு இந்த ஜென்மத்தில் திருமணமே நடக்க வாய்ப்பில்லை என்று கரித்துக் கொட்டுகிறார்கள்..” என்றாள்.

‘இவரிடம் கிடைத்த பரவசம் வேறு யாரிடமும் கிடைக்காதபோது, இவரையே நீங்கள் திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திக்கலாமே?’ என்று நான் கேட்டதற்கு இருவருமே, “இல்லை.. இல்லை.. அதற்கு வாய்ப்பே இல்லை..” என்று அவசரமாக மறுத்தார்கள்.

இதேபோல் இன்னொரு ஜோடி. அவர்கள் இருவருமே முப்பது வயதை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கலைத்துறையோடு தொடர்பு கொண்டவர்கள். இருவரும் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கும் பயணிக்கிறார்கள். அப்போது அவளுடன் அந்த இளைஞனும் செல்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கிக் கொள்கிறார்கள். எல்லா சுகதுக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த ஜோடிக்கு இப்போது என்ன பிரச்சினை என்றால், இளைஞனுக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணை பேசி முடித்து, நிச்சயதார்த்தம் செய்து விட்டார்கள். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க அவர் தயாராகி விட்டார். ஆனால் நண்பருக்கு திருமணம் என்பதை உடன் பழகும் இந்த தோழியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “எனது முகூர்த்த நாள் நெருங்க நெருங்க இவளுக்கு மன அழுத்தம் கூடிக் கொண்டே இருக்கிறது. மனமுடைந்து போய் அழுகிறாள். நான் இல்லாமல் அவளால் வாழ முடியாது என்று சொல்கிறாள். என்னை மணக்கோலத்தில் இவளால் பார்க்க முடியாது. அதனால் என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று இவளிடம் கூறினேன். ஆனால் இவளோ, வந்து கலந்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்” என்றார்.

உள்ளபடியே அவள் அதிக மன அழுத்தத்தில்தான் இருந்தாள். அதனால் அவளால் தனது கலைத் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ச்சியான கவுன்சலிங்குக்கு பிறகே அவளது மனநிலையை இயல்புக்கு கொண்டு வர முடிந்தது.

இவர்களைப் போன்ற பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இத்தகைய நட்புக்கு அவரவருக்கு தக்கபடி பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் தோழியை ‘ஹாப் கேர்ள் பிரெண்ட்’ என்கிறார்கள். பெண்கள், தங்கள் தோழர்களை ‘ஹாப் பாய் பிரெண்ட்’ என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பாதி காதலர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வயதைக் கடந்தும், பருவத்தை கடந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 70 வயது வரை இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். நட்பு அதன் எல்லையோடு நட்பாக மட்டும் இருக்க வேண்டும்.

விழிப்பாக இருப்பது எப்படி?

இதுபோன்ற உறவுகளில் இருப்பவர்களை அலசி ஆராய்ந்தபோது, இந்த நட்பால் அவர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இதுபோன்ற உறவுகளில் விழிப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்காலத்தில் இருந்தே ஆண்கள்- பெண்களோடும், பெண்கள் - ஆண்களோடும் சகஜமாக நட்பு பாராட்டத் தொடங்க வேண்டும். அப்படி நட்பு பாராட்டினால் நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நட்புக்கு எல்லை வகுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

பள்ளிக்காலத்திலே எதிர்பாலினரிடம் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கல்லூரி காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ, தன்னை உணர்ந்த நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் அளவுக்கு மீறிய நிலையில் பழகும்போது, அது இத்தகைய நட்பாகி விடுகிறது. (பள்ளிக் காலத்திலே ஆண், பெண் நட்பை சகஜமாக எதிர்கொள்வது இதற்கு நல்ல தீர்வு)

பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும் வழக்கம் இல்லாதவர்களிடமும், பிரிந்திருக்கும் பெற்றோர்களிடம் வளருகிறவர்களிடமும், தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதாக கருதும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறையும். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறவர், பாதுகாப்பு அளிக்கத் தகுதியானவர் என்று கருது பவர்களிடம் இத்தகைய நட்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். (பெற்றோர்களிடம் மனம்விட்டுப்பேசுவதும், அவர்கள் மூலம் பாதுகாப்பு கிடைப்பதும் இதற்கு நல்ல தீர்வு)

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான ரகசியங்கள் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட ‘பாதி பெண் தோழிகள்’ உறவில் இருக்கும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் சிறுவயது பாலியல் கசப்புகள் முதல் குடும்ப ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆண் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த அந்தரங்க பகிர்வுகள் எதிர்காலத்தில் அந்த பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. (அதனால் இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், நண்பர்களிடம் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்)

நண்பர், காதலர், கணவர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஒரு நண்பரால் நல்ல காதலராகவும், சிறந்த கணவராகவும் ஆக முடியும். அப்படி படிப் படியாக அந்த உறவை உயர்த்திச் செல்ல தைரியம் வேண்டும். அதிக தன்னம்பிக்கையும் அவசியம். ஆனால் இந்த ஹாப் கேர்ள் பிரெண்ட், ஹாப் பாய் பிரெண்ட் போன்றவர்கள் அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள். அதே நேரத்தில் அந்த ஆண், நண்பர் என்ற பெயரை வைத்துக் கொண்டு காதலராகவும், கணவராகவும் மறைமுகமாக செயல்பட அவர் விரும்புவார். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினையை உருவாக்குவார். (அதனால் இப்படிப்பட்ட நண்பர்களிடம் எப்போதும் விழிப்பாக பழகுங்கள்)

இப்படி நண்பர்களாக பழகும் பெண்களில் பலர், தனது நண்பனை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். இதனால் அவர்களது சொல்படி நடந்து பெற்றோர்களை கூட பகைத்துக் கொள்கிறார்கள். (எந்த நண்பனும், பெற்றோருக்கு நிகரில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய நட்பில் இருக்கும் ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். பின்பு இந்த நட்பில் இருக்கும் ஆண், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் போது, அவருடன் நட்பில் இருக்கும் பெண்ணுக்கு திருமண வயது கடந்து போயிருக்கும். அதன் பின்பு அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுக்கு வரன் அமையாது. பின்பு ஏதாவது ஒருவர் கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை ஏமாற்றமாகி விடும். (தனக்கு எப்படிப்பட்ட நண்பர் இருந்தாலும் வாழ்க்கைக்கு கணவர் தேவை என்பதை பெண்கள் புரிந்து நட்பு பாராட்ட வேண்டும். சரியான பருவத்தில் தகுதியானவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்). 

- விஜயலட்சுமி பந்தையன்.

மேலும் செய்திகள்