காப்பாற்ற வேண்டிய நன்னீர் தாவரங்கள்

அரிய வகை தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. நன்னீர் தாவரங்களும் இதில் அடக்கம்.

Update: 2018-12-15 07:51 GMT
தாவரங்கள்தான் இந்த உலகின் முதன்மை உணவு உற்பத்தியாளர்கள். இதில் பயிர் செய்யப்படும் தாவரங்களின் நன்மைகளை ஓரளவுக்கு உணர்ந்திருக்கிறோம். ஆனால், இன்றளவும் காடுகளில் இருக்கும் தாவரங்கள் எண்ணற்ற நன்மைகளை நமக்கு செய்துவருகின்றன. இந்த தாவரங்களில் பல இனம் கண்டறியப்படுவதற்கு முன்பே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உலகின் மிகவும் குறிப்பிடத்தக்க பல்லுயிரிய மையமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் இருக்கும் சில அரிய வகை தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. நன்னீர் தாவரங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலான தாவரங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரை சுத்திகரிக்கும் பணியில் உள்ளன.

நன்னீர் தாவரங்கள் மக்களுக்கு உணவாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் உள்ளன. மனித பயன்பாட்டுக்கு தேவைப்படும் பொருட்கள் தயாரிக்கவும் காடுகளில் இருந்து பல தாவரங்கள் எடுக்கப்படுகின்றன. சதுப்புநில புல் வகையான லெப்டொசொலே நீசி என்ற தாவரம் மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. லெம்னா ஜிபா என்ற தாவரம் அழுக்கு தண்ணீரைச் சுத்திகரிக்கவும், எரிசக்தி உற்பத்திக்கும் முக்கியமாக பயன்படுகிறது. சைபரஸ் ட்டுபரோஸ் என்ற நீர்வாழ் தாவரம் ஊதுவத்தி, வாசனை திரவிய தயாரிப்பில் பயன்படுகிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான நன்னீர் தாவரங்கள் உரம் தயாரிப்பில் மூலப்பொருளாக உள்ளன.

நன்னீர் தாவரங்கள் மருத்துவ குணம்கொண்டவையாகவும், உணவுக்காகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகின்றன. மேலும் சாயம் தயாரிக்கவும், வேதிச்சேர்மங்கள் தயாரிக்கவும், எண்ணெய் தயாரிக்கவும், நார் பொருள்கள் உருவாக்கவும், அழகுக்காகவும், தோட்டங்களில் வளர்க்கவும், ஆராய்ச்சிக்காகவும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

வாழிட அழிப்பும், வேகமான நகரமயமாக்கலும், அந்நியத் தாவரங்களின் ஆதிக்கமும் நன்னீர் தாவர எண்ணிக்கை குறையவும் அழிவுக்கும் காரணமாக உள்ளன. நம் நாட்டில் பெருவாரியான மக்கள் இந்த நன்னீர் சூழல், நன்னீர் உயிரினங்களை நம்பியே வாழ்கின்றனர். நம்மை சுற்றி உள்ள, அதிகம் கவனிக்கப்படாத இந்த நன்னீர் உயிரினங்களையும் தாவரங்களையும் அவை செய்துவரும் சூழலியல் நன்மைகளையும் நாம் உணர வேண்டும்.

எனவே ஒருங்கிணைந்த வாழிடப் பாதுகாப்பு, தனி மனிதச் சூழலியல் அக்கறை, மாசுபாடு மேலாண்மை, முறைப்படுத்தப்பட்ட சுற்றுலா, சட்டங்கள், தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் போன்றவற்றால் மூலமே அழிவிலுள்ள நன்னீர் தாவரங்களை காப்பாற்ற முடியும்.

மேலும் செய்திகள்