கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவு : ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கியது எல்.ஐ.சி.

ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கி உள்ளது. இதனையடுத்து இந்த கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடைந்ததாக ஐ.டீ.பீ.ஐ. வங்கி தெரிவித்தது.

Update: 2019-01-22 07:50 GMT
நிறுவன முதலீட்டாளர்

எல்.ஐ.சி. நிறுவனம் பங்குகள், கடன்பத்திரங்களில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. ஏராளமான நிதி ஆதாரத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவன முதலீட்டாளராக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மற்றும் வெளியீடுகளுக்கு இந்நிறுவனம் பெரும் ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் பெரும்பான்மை பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அது முதல் முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு அடிப்படையில் அதன் பங்குகளை எல்.ஐ.சி. பல்வேறு கட்டங்களாக வாங்கி வந்தது. இப்போது 51 சதவீத பங்குகளையும் வாங்கி முடித்து விட்டதாக ஐ.டீ.பீ.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.

எனினும் இந்திய காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐ.ஆர்.டீ.ஏ) விதிமுறைப்படி இந்த வங்கியிலும் எல்.ஐ.சி. தனது பங்கு மூலதனத்தை படிப்படியாக குறைத்து 15 சதவீத அளவிற்கு கொண்டு வர வேண்டியிருக்கும். இதற்காக அந்த நிறுவனத்திற்கு கால அவகாசம் வழங்கப்படும் என ஐ.ஆர்.டீ.ஏ. கூறி இருக்கிறது.

ஐ.டீ.பீ.ஐ. வங்கி, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) ரூ.3,602 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கியின் இழப்பு ரூ.198 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் (24.98 சதவீதத்தில் இருந்து) 31.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பங்கின் விலை

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஐ.டீ.பீ.ஐ. வங்கிப் பங்கு ரூ.58-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.58.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.56.20-க்கும் சென்றது. இறுதியில் 3.17 சதவீதம் இறங்கி ரூ.56.50-ல் நிலைகொண்டது. 

மேலும் செய்திகள்