2018 காலண்டர் ஆண்டில் இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39 சதவீதம் உயர்வு

2018 காலண்டர் ஆண்டில் இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 39 சதவீதம் உயர்ந்துள்ளது.

Update: 2019-01-22 07:59 GMT
ஆய்வு

உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடைபெற்றது. அதன் மூலம் இந்திய கோடீஸ்வரர்களில் மெகா கோடீஸ்வரர்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு கடந்த 2018-ஆம் ஆண்டில் 39 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அந்த ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாள் ஒன்றுக்கு ரூ.2,200 கோடி உயர்ந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வின் மற்ற சில முக்கிய முடிவுகள் வருமாறு:

சென்ற ஆண்டில் உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு சொத்து மதிப்பு 250 கோடி டாலர் உயர்ந்துள்ளது. அதே சமயம் உலக மக்கள்தொகையில் மிகவும் ஏழையான மக்களில் 50 சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 11 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பரம ஏழைகளின் 10 சதவீதமாக உள்ளது. அதாவது மொத்தம் 13.6 கோடி மக்கள் கடும் ஏழ்மையில் உள்ளனர். 2004-ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்தியாவின் தேசிய சொத்தில் 77.4 சதவீதம் மிக வசதி படைந்த 10 சதவீதத்தினரிடம் இருக்கிறது. அதிலும் 51.53 சதவீத சொத்து மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கும் ஒரு சதவீதத்தினரிடம்தான் உள்ளது.

இந்தியாவில் புதிதாக 18 பெரும் கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர். இதனால் இந்தப் பிரிவினரின் மொத்த எண்ணிக்கை 119-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இவர்களுடைய சொத்து மதிப்பு முதல் முறையாக 40,000 கோடி டாலர் (ரூ.28 லட்சம் கோடி) என்ற சாதனை அளவை தாண்டி இருக்கிறது.

ஜெப் பெசோஸ்

உலகப் பெரும் கோடீஸ்வரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளார். 2018-ஆம் ஆண்டில் அவருடைய சொத்து மதிப்பு 11,200 கோடி டாலராக உயர்ந்து இருக்கிறது. எத்தியோப்பியா நாட்டின் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும் நிதியானது அவருடைய சொத்து மதிப்பில் ஒரு சதவீதத்திற்கு மட்டுமே நிகரானது.

இவ்வாறு அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்