2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் மட்டும் வளர்ச்சி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Update: 2019-02-13 09:51 GMT
புதுடெல்லி

2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.4 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய மாதத்தில் (நவம்பர்) இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி (0.5 சதவீதத்தில் இருந்து) 0.3 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2017 டிசம்பரில் 7.3 சதவீத வளர்ச்சி இருந்தது.

பொருளாதார குறியீடு

தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐ.ஐ.பி) என்பது இந்தியாவின் ஒரு பொருளாதார குறியீடு ஆகும். சுரங்கம், மின்சாரம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சியை இது சுட்டிக் காட்டுகிறது. அடிப்படை ஆண்டு ஒன்றை வைத்து, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களை இந்த குறியீட்டு எண் அளவிடுகிறது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் நிலக்கரி, கச்சா எண்ணெய், உருக்கு உள்ளிட்ட 8 உள்கட்டமைப்பு துறைகளின் பங்கு 41 சதவீதமாக உள்ளது. இந்த துறைகளின் உற்பத்தி, டிசம்பர் மாதத்தில் 2.6 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டு இருக்கிறது. எனவே அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் ஓரளவு முன்னேற்றத்தையே எதிர்பார்க்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். அதற்கு ஏற்ப 2.4 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது.

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் உற்பத்தி துறையின் பங்கு 78 சதவீதமாக உள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தத் துறை 2.7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 8.7 சதவீதமாக இருந்தது. கனிமங்கள் உற்பத்தி 1 சதவீதம் குறைந்துள்ளது. மின் உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக மாற்றமின்றி உள்ளது. பொறியியல் சாதனங்கள் உற்பத்தி வளர்ச்சி (13.2 சதவீதத்தில் இருந்து) 5.9 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

பங்கு வர்த்தகம்

நேற்று பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மற்றும் சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளிவந்தது. இதன் தாக்கத்தை இன்று (புதன்கிழமை) உணரலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்