நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இயற்கை ரப்பர் உற்பத்தி 7 சதவீதம் குறைந்தது - ரப்பர் வாரியம் தகவல்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Update: 2019-03-14 15:57 GMT
புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 ஜனவரி) இயற்கை ரப்பர் உற்பத்தி 7 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா 6-வது இடம்

சர்வதேச ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தோனேஷியா இரண்டாவது இடத்திலும், மலேஷியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. வியட்நாம் நான்காவது இடத்திலும், சீனா ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

நம் நாட்டில், 2016-17-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.91 லட்சம் டன்னாக அதிகரித்தது. 2015-16-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (5.62 லட்சம் டன்) அது 23 சதவீத வளர்ச்சியாக இருந்தது. சென்ற நிதி ஆண்டில் (2017-18) 8 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் 6.94 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆனது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 6 லட்சம் டன் ரப்பர் உற்பத்தியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி வரையிலான முதல் 10 மாதங்களில் 5.56 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி ஆகி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் குறைவாகும். அப்போது உற்பத்தி 5.97 லட்சம் டன்னாக இருந்தது.

இதே காலத்தில் நாட்டின் ரப்பர் பயன்பாடு 12 சதவீதம் அதிகரித்து 10.2 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது இயற்கை ரப்பரின் தேவைக் கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளியை 45 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

ரப்பர் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் இருந்தாலும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. நம் நாட்டில் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் ரப்பரை இறக்குமதி செய்கின்றன. பொதுவாக மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.

உற்பத்தி சரிவடையும்

நடப்பு நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 18 முதல் 20 சதவீதம் வரை சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தில் 84 சதவீத பங்கினைக் கொண்டுள்ள கேரள மாநிலத்தில், கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை- வெள்ளம் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

மேலும் செய்திகள்