இயற்கை ஆர்வலராக மாறிய ‘சூதாட்டக்காரர்’

அமெரிக்காவில் வசித்த எம்.சி.டேவிஸ் மிகப் பெரிய தொழிலதிபராகவும், சூதாட்டக்காரராகவும் இருந்தார். இவரிடம் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்ததால், இவர் கலந்து கொள்ளாத சூதாட்டமே கிடையாதாம்.

Update: 2019-03-15 11:03 GMT
 இப்படியே சூதாட்டக்காரராக விளங்கிய டேவிஸ், ஒருநாள் திடீரென இயற்கை ஆர்வலராக மாறிவிட்டார். அதுவரை சூதாட்டத்திற்காக பயன்படுத்திய சொத்துக்களை கொண்டு, பெரிய இயற்கை காட்டையே உருவாக்கிவிட்டார்.

இதற்காகத் தன் சொத்தில் இருந்து 9 கோடி டாலர்களைச் செலவு செய்தார். ஆயிரக்கணக்கான நிலங்களை புளோரிடாவில் வாங்கினார். பைன் மரங்களை வளர்த்தார். மரங்கள் ஓரளவு வளர ஆரம்பித்த பிறகு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து காட்டுக்குள் விட்டார். வவ்வால்களைக் காப்பதற்கு செயற்கை குகைகளை அமைத்தார். நீர்நிலைகளை உருவாக்கி, கடல் ஆமைகளை வளர்த்தார். 20 ஆண்டுகளில் 53 ஆயிரம் ஏக்கரில் காடுகளை வளர்த்திருந்தார், டேவிஸ்.

இயற்கையான காடுகளைப் போலவே புற்கள், மணற்குன்றுகள், சமவெளிகள், கழிமுகங்கள் எல்லாம் இந்தக் காட்டில் உருவாகிவிட்டன. அழிந்து வரக்கூடிய கடல் ஆமைகள் உட்பட 360 உயிரினங்கள் தற்போது வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் டேவிஸ். இனி தான் பிழைக்க முடியாது என்று தெரிந்தவுடன், மருத்துவமனையை விட்டு வெளியேறி, தான் அமைத்த பைன் மரக் காட்டுக்குள் தங்கி, உயிர்விட்டார். இப்போது டேவிஸ் இல்லைஎன்றாலும், அவர் உருவாக்கிய காட்டிற்கு, அடுத்த 300 ஆண்டுகளுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் தன்னுடைய உயில் மூலமாக நிறைவேற்றியிருக்கிறார். தான் செய்த விஷயங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாததால், அவர் இருக்கும்போது அவரது சாதனை வெளியே தெரியவில்லை. அவர் மறைந்த பிறகு, அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானவர்கள் இந்தக் காடுகளுக்கு வந்து செல்கிறார்கள்.

சூதாட்டத்தில் பணத்தை செலவழித்து வந்த டேவிஸுக்கு எப்படி இயற்கையின் மீது ஆர்வம் வந்தது?, எதற்காக தன்னுடைய சொத்து முழுவதையும் காட்டிற்காக அர்ப்பணித்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே இருக்கின்றன. இருப்பினும் ‘இயற்கையின் எதிர்காலம் என்ன?’ என்ற கேள்விக்கு மட்டும் டேவிஸ், தன்னுடைய காட்டின் மூலம் பதிலளித்துவிட்டு சென்றிருக்கிறார்.

மேலும் செய்திகள்