பி.எப். கணக்குடன் ஆதாரை இணைக்காவிட்டால்...

பணிபுரியும் நிறுவனத்தின் தலையீடு அதிகம் இல்லாமல் பி.எப். எனப்படும் பிராவிடன்ட் பண்ட் (வருங்கால வைப்புநிதி) கணக்கையும், பி.எப். தொகையையும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு ஆதார் எண்ணை அவசியம் பி.எப். கணக்கோடு இணைத்திருக்க வேண்டும்.

Update: 2019-03-16 11:27 GMT
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஈ.பி.எப்.ஓ. அலுவலகம், அதன் 6 கோடி பயனாளர்கள் மற்றும் கணக்குதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ‘எனிவேர் சர்வீஸ்’ என்கிற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. ஆனால் இந்தத் திட்டத்துக்கும் ஆதார் வேண்டும்.

புதிய திட்டம் வந்துவிட்டால், எந்தச் சிரமமும் இல்லாமல் பி.எப். கணக்காளர்கள் தங்கள் பி.எப். பணத்தை புதிய கணக்கோடு சேர்த்துக்கொள்ளலாம். எளிதில் கிளெய்ம் பெறலாம், முறையாக பென்ஷன் வாங்கலாம்.

ஏற்கனவே யூ.ஏ.என். கொண்டு வந்தபின் தொழிலாளர்களும் ஊழியர்களும் தங்கள் கணக்குகளை உடனடியாக புதிய கணக்குகளோடு இணைத்துக்கொள்ள முடிகிறது. அதேபோல அவர்களுக்கு பழைய நிறுவனத்தில் இருந்து கிடைத்த பி.எப். தொகையையும் புதிய பி.எப். கணக்கோடு இனி இணைத்துக்கொள்ள முடியும்.

இன்னும் ஒரு கிளெய்ம் பெற வேண்டும் என்றாலோ அல்லது பி.எப். தொடர்பான சில பிரச்சினைகள் என்றாலோ, பென்ஷன் கணக்கீடுகள் என்றாலோ பி.எப். அலுவலகங்களுக்கே நேரடியாக வர வேண்டி இருக்கிறது. அதுவும் நம் பி.எப். கணக்கு எங்கு இருக்கிறதோ அங்கு செல்ல வேண்டும். இப்படி பி.எப். கணக்குதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இன்னும் அலுவலகங்களிலேயே செய்யப்படுகிறது.

இதை எல்லாம் இனி வரும் காலங்களில் ‘எனிவேர் சர்வீஸ்’ முறையில் ஆதார் உதவியோடு சரி செய்ய இருக்கிறது, பி.எப். அலுவலகம்.

இப்போது வரை, பி.எப். கணக்குகளுக்கு யூ.ஏ.என். எண்கள் வழங்கப்பட்டிருப்பது கூட தெரியாமல் பி.எப். கணக்குகளை வைத்திருப்பவர்களும் உண்டு. இதை எல்லாம் சரி செய்து நிர்வகிக்கத்தான் புதிய சேவை முறையைத் தொடங்க இருக்கிறது, பி.எப். அலுவலகம். சுருக்கமாக, பி.எப். அலுவலகங்களை அதிகம் நம்பாமல் நேரடியாக ஆன்லைனிலேயே அனைத்து சேவைகளையும் செய்து முடித்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய விரும்புகிறது ஈ.பி.எப்.ஓ.

ஒரு நபர் தன்னுடைய புதிய வேலையில் சேர்ந்தபின் ஒரே ஒரு முறை பி.எப்.-க்கு பணத்தை போட்டால் போதும், அவர்களின் பழைய பி.எப். கணக்குகளில் உள்ள பாக்கித் தொகைகள் மற்றும் இ.பி.எஸ். அடிப்படையில் வரும் பென்ஷன் சலுகைகள் அனைத்தும் மீண்டும் புதிய கணக்கோடு இணைக்கப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இனி வரும் காலங்களில் இவை எல்லாமே பி.எப். அலுவலகத்திடம் விண்ணப்பிக்காமல் தானாகவே நடக்கும். ஆனால் இப்போதைக்கு, விண்ணப்பித்தால்தான் நடக்கிறது.

பொதுவாக பி.எப். கணக்குதாரர்கள் கொடுக்கும் சேவை விண்ணப்பங்கள், பி.எப். கணக்கு இருக்கும் அலுவலகங்களுக்கே செல்லும். நம் பி.எப். கணக்கு இருக்கும் அலுவலகம்தான் நமக்கான சேவைகளைச் செய்ய முடியும்.

இந்நிலையில், ஆதார் எண்ணை பி.எப். கணக்கோடு சேர்க்காமல் இருந்தால் துரித சேவை கிடைப்பது கடினம்.

ஈ.பி.எப்.ஓ. அலுவலகம் தன்னால் முடிந்த வரை தன் கணக்குதாரர்களுக்கு சேவையாற்ற முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் பலரின் பி.எப். கணக்குகளை முழுமையாகச் சரிபார்க்க முடியவில்லை. காரணம், 40 சதவிகித கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்கவில்லை.

எனவே, நாம் நம் ஆதாரை இணைத்து, பி.எப். பணத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்