தைராய்டு பாதித்தும் தளராத உடல் அழகு

திக்‌ஷா சபாரா, தைராய்டு பாதிப்புக்கு ஆளானவர். அதனால் உடல் பருமன் பிரச்சினையும் அவரை தொற்றிக்கொண்டது. 29 வயதில் 96 கிலோ எடை கொண்டிருந்தார்.

Update: 2019-03-17 11:39 GMT
திக்‌ஷா சபாரா, தைராய்டு பாதிப்புக்கு ஆளானவர். அதனால் உடல் பருமன் பிரச்சினையும் அவரை தொற்றிக்கொண்டது. 29 வயதில் 96 கிலோ எடை கொண்டிருந்தார். உடல் எடையை குறைக்க கடுமையாக போராடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். கட்டுடல் அழகை பராமரிக்க அவர் மேற்கொண்ட முயற்சி உடற்பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர், மாடல் அழகி போன்ற பெருமைகளையும் பெற்றுக்கொடுத் திருக்கிறது.

‘‘நான் கல்லூரி படிப்பின்போது என்.சி.சி.யில் சேர்ந்திருந்தேன். தடகள வீராங்கனையாகவும் இருந்தேன். நடனமும் எனக்கு தெரியும். திருமணத்திற்கு பிறகு அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவே நேரம் போதவில்லை. காலை 9 மணியில் இருந்து 5 மணி வரை அலுவலக பணிக்கு சென்று கொண்டிருந்தேன். என் கணவர் ராணுவத்தில் பணி புரிகிறார். ஐந்து வயது மகனை என்னுடைய பராமரிப்பிலேயே வளர்க்க வேண்டியிருந்தது. ஏனெனில் மாமியார் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்.

குடும்ப நலனில் கவனம் செலுத்திய வேளையில் என் நலனை கருத்தில் கொள்ள மறந்துவிட்டேன். மன அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்சினைக்கு ஆளானேன். சரிவர தூக்கம் வராமலும் அவதிப்பட்டேன். ஒன்பது ஆண்டுக்கு பிறகு என்னை பார்த்த கல்லூரி நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு என் உடல் எடை கூடிவிட்டது. அவர்கள் சொன்ன பிறகுதான் உடல் நலனில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

எப்படியாவது உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். பார்த்துவந்த வேலையை ராஜினாமா செய்தேன். சாப்பாட்டின் அளவை குறைத்தேன். கடுமையான உடற்பயிற்சிகளை செய்தேன். அதனால் ஆறு மாதங்களுக்குள் 18 கிலோ எடை குறைந்துவிட்டேன். ஆனால் உடல் தளர்ந்து போய்விட்டது. சருமமும் பொலிவை இழந்தது. எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தவறான உணவு பழக்க வழக்கமும், கடுமையான உடற்பயிற்சியும்தான் அதற்கு காரணம் என்பதை தாமதமாக புரிந்து கொண்டேன். பின்னர் சரிவிகித உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க தொடங்கினேன். ஜிம்முக்கு சென்று முறையான பயிற்சிகளை செய்தேன். அதன் பிறகு எனது தசைகள் இறுகத் தொடங்கியது.

சரிவிகித உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்த பின்னர் என் உடல் நலன் மேம்பட தொடங்கியது. உடலில் உள்ள கொழுப்பு குறைந்தது. உடல் எடையும் 12 கிலோ குறைந்தது. முன்பை விட உடல் புத்துணர்சியுடன் காணப்பட்டது’’ என் கிறார்.

திக்‌ஷா உடல் குண்டாக இருந்தபோதும், எடை குறைந்த பின்னரும் எடுத்த படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதை பார்த்து உடல் எடையை குறைக்க விரும்புபவர் களுக்கு ஆலோசனைகளும், பயிற்சிகளும் வழங்கிக்கொண்டிருக்கிறார். அதற்காக முறைப்படி பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

‘‘நான் என் உடல் எடையை குறைக்க மூன்று ஆண்டுகள் போராடி இருக்கிறேன். எனது அனுபவத்தை கேட்டுவிட்டு ஏராளமானவர்கள் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள். மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிடாது. பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்’’ என்கிறார்.

டெல்லியை சேர்ந்தவரான திக்‌ஷா, ‘திருமதி இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்