உலகில் நான்கில் ஒரு மரணம் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படுகிறது

உலகில் ஏற்படும் நான்கில் ஒரு மரணத்துக்கு மனிதன் உண்டாக்கிய சுற்றுச்சூழல் சீரழிவு கள்தான் காரணம் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

Update: 2019-03-23 07:56 GMT
அன்றாடம் அளவின்றி வெளியிடப்படும் நச்சு வாயுக்கள், நீர்நிலைகளை மாசுபடுத்தும் வேதிப்பொருட்கள், வேகமாக அழிக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் அமைப்பு எல்லாம் சேர்ந்து, உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்து வருகின்றன, அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது என்று ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.

உலகளாவிய சுற்றுச்சூழல் பார்வை என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டு காலமாக தயார் செய்யப்பட்டு வந்த இந்த ஆய்வறிக்கையை, 70 நாடுகளைச் சேர்ந்த 250 விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

வளர்ந்த நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையில் பிளவு வளர்ந்து வருகிறது. அதற்கு, வளர்ந்த நாடுகளின் அதிக நுகர்வு, சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு வீணாக்கம் ஆகியவையும், அதனால் ஏழை நாடுகளில் ஏற்படும் வறுமை, உணவுப் பற்றாக்குறை, வியாதிகளும்தான் காரணம்.

அதிகரித்து வரும் வறட்சி, வெள்ளம், புயல் போன்றவற்றை உயரும் கடல் மட்டம் மேலும் மோசமாக்கி வருகிறது. பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றமும் அதிகரித்து வருகிறது. எதிர் காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை பருவநிலை மாற்றம் அபாயத்தில் தள்ளும் என்ற அரசியல் உணர்வும் வளர்ந்து வருகிறது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சார்ந்த சுகாதார அவசரநிலை இப்போது ஏற்பட்டுள்ளது. மோசமான சுற்றுச்சூழல் காரணமாக, உலகளவில் சுமாராக 25 சதவீத வியாதிகளும், இறப்புகளும் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டில் 90 லட்சம் மரணங்கள் நேர்ந்திருக்கின்றன.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத காரணத்தால் ஆண்டுதோறும் 14 லட்சம் பேர் இறக்கின்றனர். வயிற்றுப்போக்கு, நுண்கிருமிகள் நிறைந்த நீரைப் பருகுவதால் ஏற்படும் பாதிப்பு என்ற இந்நிலை, தடுக்கப்படக்கூடியதுதான்.

கடலுக்குள் கொட்டப்படும் வேதிப்பொருட்களால் ஏற்படும் சீர்குலைவு, பல தலைமுறை களுக்கு ஆரோக்கியப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தீவிர விவசாயம், காடுகள் அழிப்பு ஆகியவற்றால், 300 கோடிப் பேரின் வாழ்விடங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

காற்று மாசுபாட்டின் காரணமாக மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 60 முதல் 70 லட்சம் பேர் இறக்கின்றனர்.

இதுபோன்ற நிலையைத் தடுத்து நிறுத்தவும், மேம்படுத்தவும் மிகப் பெரிய அளவிலான உடனடி நடவடிக்கை தேவை என, குறிப்பிட்ட அறிக்கை யுடன் உலகத் தலைவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை மேம்படுவதற்கு மனித நடவடிக்கைகளில் வேர் முதல் கிளை வரை மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

உதாரணத்துக்கு, உணவை வீணாக்குதல் மட்டும் 9 சதவீத பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்துக்குக் காரணமாகிறது. அதைத் தடுக்க முடியும். உலகில் தற்போது உற்பத்தி செய்யப்படும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு, வீணாக்கப்படுகிறது. அதேநேரம், பணக்கார நாடுகளில் வீணாக்கப்படும் உணவுகளின் சதவீதம் 56 என்ற அளவுக்கு உள்ளது.

காற்று மற்றும் நீர் தரத்தை மேம்படுத்த பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும், பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டையும் வெகுவாகக் குறைக்க வேண்டும் அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைக் கணக்கிட, பல்வேறு தரவு மூலங்களையும் ஐ.நா. அறிக்கை பயன்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்