தினம் ஒரு தகவல் : போர்ச்சுக்கீசியர்களும், இந்தியாவும்...

ஐரோப்பியர்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்தனர். அப்படி முதலில் வந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

Update: 2019-03-28 03:35 GMT
கி.பி. 1498-ம் ஆண்டு மே மாதம் 17-ந் தேதி வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுக்கீசியர் கேரளாவின் கள்ளிக்கோட்டையை (கோழிக்கோடு) வந்தடைந்தார். கள்ளிக்கோட்டையை ஆண்டு வந்த ஜாமொரின் என்ற அரசன், போர்ச்சுக்கீசியர்கள் வர்த்தகம் செய்வதற்காக பண்டகசாலை ஒன்றை கட்டிக்கொடுத்தார். கி.பி.1500-ல் பெட்ரோஆல்வாரிஜ் கேப்ரல் என்பவர் 13 கப்பல்களில் சரக்குகளுடன் வந்திறங்கினார்.

பின்னர் கொச்சி மன்னரின் உதவியுடன் கொச்சி மற்றும் கண்ணனூரில் பண்டகசாலை அமைத்துக்கொண்டனர். கி.பி.1505-ல் மெய் என்ற போர்ச்சுக்கீசிய ராஜ பிரதிநிதி இங்கு வந்தார். இவர் குஜராத் மன்னர் கடற்படையை வென்று 1509-ல் டையூவை கைப்பற்றினார். இதனால் போர்ச்சுக்கீசியர்களின் கடல் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதையடுத்து இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய கவர்னர் அல்புகார்க் இந்தியாவில் அதிகாரம் செய்ய தொடங்கினார்.

இவர் கோவாவை கைப்பற்றி அதனை போர்ச்சுக்கீசிய தலைநகராக மாற்றினார். இவர் தன்னுடன் வந்த தங்கள் நாட்டினரிடம் இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதன்மூலம் தனக்கு ஆதரவான நிலையை உருவாக்க முயன்றார். இங்குள்ளவர்களை எழுத்தராகவும், சிப்பாய்களாகவும் நியமித்தார். அப்போது கோவாவில் இந்துக்கள் மத்தியில் இருந்து வந்த ‘சதி‘ எனும் நடைமுறையை ஒழித்தார். பள்ளிக்கூடங்களை தொடங்கினார். இவருக்குப்பின் வந்தவர்கள் பாசெய்ன் டையூ, மும்பை, டாமன் சால்செட், சாந்தோம் போன்ற இடங்களில் வர்த்தகம் நடத்தி பண்டகசாலைகளை கட்டினர். போர்ச்சுகல் மிகவும் சிறிய நாடு. அதனிடம் போதிய செல்வ வளமும், மனித ஆற்றலும் இல்லை. இருந்தாலும் வர்த்தகத்தை காற்றில் பறக்கவிட்டு பிற நாடுகளை பிடிக்க எண்ணினர். இதனால் பல பகுதிகளை இழக்கத் தொடங்கினர்.

கி.பி.1629-ல் முகலாயர்களிடம் ஊப்ளியை இழந்தனர். மராட்டியர்கள் கால்செட்டையும், பாசெய்னையும் கைப்பற்றினர். மும்பை போர்ச்சுக்கீசிய மன்னரால் ஆங்கிலேயருக்கு சீதனமாக வழங்கப்பட்டது. போர்ச்சுக்கீசியருக்கு ஆதரவளித்து வந்த விஜயநகர பேரரசு சரிந்த பின் அவர்களது செல்வாக்கும் குறைந்தது.

இவர்களை அடுத்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்த டச்சுக்காரர்கள் இவர்களை வளர விடாமல் தடுத்தனர். இறுதியில் கோவா, டையூ, டாமன் மட்டுமே போர்ச்சுக்கீசியர் வசம் மிஞ்சியது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் வெகுநாட்களாக இந்த பகுதியில் இருந்து போர்ச்சுக்கீசியர் வெளியேற மறுத்தே வந்தனர். 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி காவல்துறை நடவடிக்கையை தொடர்ந்து கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதனுடன் அருகே இருந்த டையூ, டாமனும் சேர்க்கப்பட்டு மத்திய ஆட்சிப்பகுதியாக்கப்பட்டது. இதன்மூலம் மீதம் இருந்த போர்ச்சுக்கீசியர்களும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் செய்திகள்