இதுவரை இல்லாத அளவிற்கு சரக்குகள் ஏற்றுமதி உயர்ந்து இருக்கும்

சென்ற நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு சரக்குகள் ஏற்றுமதி உயர்ந்து இருக்கும் மத்திய அரசு அதிகாரி நம்பிக்கை

Update: 2019-04-04 03:52 GMT
சென்ற நிதி ஆண்டில் (2018-19) இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி உயர்ந்து இருக்கும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக...

2017-18-ஆம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 30,284 கோடி டாலர் அளவிற்கு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அந்த ஆண்டில் ஏற்றுமதி 30,000 கோடி டாலரை தாண்டியது. இதற்கு முன் 2014-15-ஆம் ஆண்டில் ஏற்றுமதி 30,000 கோடி டாலருக்கும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், சென்ற நிதி ஆண்டில் (2018-19) சரக்குகள் ஏற்றுமதி 33,000 கோடி டாலராக அதிகரித்து, புதிய சாதனை அளவை எட்டி இருக்கும் என ஒரு மத்திய அரசு அதிகாரி கூறி இருக்கிறார். மதிப்பீடு செய்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது (30,284 கோடி டாலர்) இது ஏறக்குறைய 20 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டில், பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் சரக்குகள் இறக்குமதி 9.75 சதவீதம் அதிகரித்து 46,400 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி 29,847 கோடி டாலராக இருக்கிறது. இது 8.85 சதவீத உயர்வாகும். எனவே முதல் 11 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 16,552 கோடி டாலராக உள்ளது.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில், ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தில் பற்றாக்குறை 9,332 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 8,246 கோடி டாலராக இருந்தது.

வர்த்தக பற்றாக்குறை

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்