முத்திரை பதித்த தமிழர்கள்

தமிழர் பண்பாடும், தமிழ் கலாசாரமும் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. தமிழர்கள் தொழில் ரீதியாகவோ அல்லது வேலை தொடர்பாகவோ உலகம் முழுவதும் பரவி கிடந்தாலும் அவர்களது தாயகம் என்பது தமிழகமும், தமிழீழம் எனப்படும் இலங்கையுமாகத்தான் இருக்கும். நமது வரலாறு நீண்டது.. நெடியது..!

Update: 2019-04-14 08:14 GMT
இந்தியாவின் தென் பகுதியில் இருந்தும் இலங்கையின் வடபகுதியில் இருந்தும் குறிப்பிடத்தக்க வகையில் தமிழர்கள் மலேசியா, பர்மா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 1,800-ம் ஆண்டிலேயே குடியேற்றப்பட்டார்கள். தொடர்ந்து மொரீசியஸ், மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் குடியேறி உள்ளனர். 20-ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று ஆசிய நாடுகளுக்கும் சென்று தமிழர்கள் முத்திரை பதித்துள்ளனர்.

1950-க்கு பின்னர் தமிழர்கள் பலர் தொழில் வல்லுனர் களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயரத்தொடங்கி விட்டனர். 1983-ம் ஆண்டில் இலங்கை இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளிலும் அகதிகளாக சென்று தடம் பதிக்க தொடங்கி விட்டனர்.

உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழை தாய் மொழியாகவும், 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி.மு.1000-ம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்கால தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகிறது. புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப்போகிறது. எனவே, அக்கால கட்டத்தில் தென் இந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை உறுதி செய்ய முடிகிறது. மேலும் அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துகள் குறைந்தது கி.மு.500-ம் ஆண்டை சேர்ந்தது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்