மனித இனம் மேம்பட புதிய சிந்தனை தேவை...!

இன்று (ஏப்ரல் 23-ந் தேதி) உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்.

Update: 2019-04-23 04:56 GMT
உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு தினமான ஏப்ரல் 23-ந் தேதி உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியரின் பங்களிப்பு உன்னதமானது. அவர் 37 நாடகங்களை எழுதியுள்ளார். ஆங்கில மொழிக்கு. சொல்வளத்தை பெருக்கியவர். சுமார் 2 ஆயிரம், 3 ஆயிரம் வார்த்தைகள் அவரே புதிதாக உருவாக்கியவை. ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான வாசகங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மனிதன் தான் கல்வியால், சிந்தனையால், அனுபவத்தால் பெற்ற அறிவினை உரையாடல்கள், பாடல்கள், கதைகள், பாறை ஓவியங்கள், மண்பானைகள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்று பலவகையில் பதித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து வந்துள்ளான். 1400-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த கூட்டன்பர்க் நவீன அச்சு இயந்திரத்தை கண்டு பிடித்தப் பிறகு தாளில் அச்சடிக்கும் முறை தொடங்கியது. இன்றைக்கு நாம் படிக்கும் புத்தகங்கள், நாளிதழ்கள் இவைகளுக்கு முன்னோடியாக அவரது கண்டுபிடிப்பு அமைந்தது. தமிழ் மொழிக்கு கூடுதல் சிறப்பு யாதெனில், இந்திய மொழிகளில் தமிழில் தான் முதல் அச்சு புத்தகம் அச்சிடப்பட்டது (1578-ம் ஆண்டு).

விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டவர். தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள் தான் விரும்பிய புத்தகம் ஒன்றை தேடிப்படித்தார். நாளைக்கு இறக்கப் போகிறீர்கள், இன்றைக்கு புத்தகமா? என்று வினவியபோது, நான் சாகும்போது முட்டாளாக இறக்க விரும்பவில்லை என்றார். பேரறிஞர் அண்ணா அறுவை சிகிச்சையினை ஓரிரு நாட்களுக்கு தள்ளி வைக்கமுடியுமா என்று கேட்டார். மருத்துவர் ஆச்சரியத்துடன் காரணத்தை வினவ, தான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டுள்ளதாகவும், அதனை முடிக்கவேண்டும் என்றார். அண்ணல் அம்பேத்கர் உலகம் போற்றும் அறிஞராக திகழ்ந்ததற்கு பல்வேறு புத்தகங்கள் படித்து பெற்ற ஆழ்ந்த அறிவே முக்கியகாரணம். ப்ராட்பரி என்கிற அறிஞர் குறிப்பிட்டது போல, ‘ஒரு இனத்தின் கலாச்சாரத்தினை அழிக்க அவர்கள் சம்பந்தமான புத்தகங்களை எரிக்க வேண்டாம். அம்மக்களை புத்தகங்கள் படிக்காமல் செய்து விட்டாலே போதும்‘. இனக்கலவரங்களின்போது நூலகங்களும், புத்தகங்களும் எரிக்கப்படுவதற்கு இதுவே மிக முக்கிய காரணம்.

600 ஆண்டுகளுக்கும் மேலாக பரவி வந்த அச்சு புத்தகங்கள் சினிமா, வானொலி, தொலைக்காட்சி, கணினி என பல்வேறு சவால்களை சந்தித்து வந்தாலும் அவைகளையும் மீறி கோலோச்சி வந்துள்ளது. 2007-க்கு பிறகு மின்புத்தகங்களின் வருகை அச்சு புத்தகங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுமோ என்று அஞ்சியபோது 2013-க்கு பிறகு, மின்புத்தகங்களின் வளர்ச்சி தேக்கமடைந்து மீண்டும் அச்சு புத்தகங்கள் விற்பனை அதிகரித்தது. அச்சுப் புத்தகங்களில் உண்டாகும் ஈடுபாடு, மகிழ்ச்சி மின் புத்தகங்களில் கிடைப்பதில்லை என்பதும் மின் புத்தகங்கள் தொடர்ந்து படிப்பதால் விழிகள் வறண்டு கண்கள் பாதிக்கப்படுவதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. அதே நேரத்தில், மின்புத்தகங்கள் உலகத்தில் எந்த மூலையில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதனை ஒரு சில நொடிகளில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்றைக்கு புத்தகம் வாசிப்பிற்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது திறன் பேசிகள். ஆரம்பத்தில் வெறும் தொலைபேசியாக அறிமுகமாகி, இன்றைக்கு வாழ்வில் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், கேமரா, மின்னஞ்சல், காணொளி, கேட்பொலி என்று எல்லா வகையிலும் நமது தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியர்கள் ஒரு நாளைக்கு சுமார் மூன்றரை மணிநேரம் தங்கள் நேரத்தினை திறன்பேசிகளில் செலவு செய்கின்றனர். 2018-ல் 34 கோடி மக்கள் திறன்பேசிகளை பயன்படுத்தினர். இந்த வருடம் இது முப்பத்தியெட்டு கோடிக்கு உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வாசகர்களிடம் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. திறன் பேசிகளை முழுமையாக விலக்கி புத்தகத்தில் மட்டுமே மக்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இச்சூழலில் புத்தகங்களையும் திறன்பேசிகளையும் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளன. இதன்மூலம் எழுத்தாளரும் அவரது வாசகர்களும் திறன் பேசியின் வழியாக இணைக்கப்படுவார்கள். வாசகர் எழுத்தாளரோடு புத்தகத்தினை குறித்து உரையாடல் நடத்த முடியும். இவ்விருவரின் உரையாடல்கள் புத்தகத்தின் அனைத்து வாசகர்களும் அறிந்துக்கொள்ள முடிகிறது. இதன்மூலம், புத்தகத்தை வாங்கி அதனை பிரிக்காமல் வைத்திருக்கும் வாசகர்கள்கூட இந்த உரையாடல்கள் மூலம் உந்துதல் பெற்று புத்தகத்தை பிரித்து படிக்க கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. அதைப்போல எழுத்தாளரும் வாசகர்களுக்கு புத்தகத்தினையொட்டிய கூடுதலான செய்திகளை அனுப்பமுடியும். நாவல், கதை போன்றவைகள் வெவ்வேறு முடிவுகள் எழுதப்பட்டு, வாசகர்கள் தங்களுக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதிகள் அமையும். வாசகர்களும் எழுத்தாளரும் தொடர்ந்து பயணிக்கவும், எதிர்காலத்தில் எழுதப்படும் புத்தகங்களை சந்தைப்படுத்த வாய்ப்பும் கிடைக்கிறது. நாம் இன்று பயணிக்க பல வகையான வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், கால்களை பயன்படுத்தி நடப்பது எவ்வளவு இன்றி யமையாததோ, அதேபோன்று தகவல்களை பல்வேறு வழிகளில் அறிந்துக் கொள்ள முடிந்தாலும் புத்தகம் வாசிப்பதன் மூலமே மூளையை வளப்படுத்த முடியும்.

மனித இனம் மேம்பட புதிய சிந்தனைகள் அவசியம். புதிய சிந்தனைகள் உருவாக அவசியமானது கற்பனை வளம். புத்தகங்கள் படிப்பது கற்பனைக்கு தூண்டுகோலாக அமைகிறது என்பதை கருத்தில் கொண்டு, நமக்கு மட்டுமல்ல, நம்மை சார்ந்தோர் அனைவரும் புத்தகம் வாசிப்பதற்கு உந்துதலாக இருப்போம் என்று இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

கோ.ஒளிவண்ணன், எழுத்தாளர்.

மேலும் செய்திகள்