மரணத்துக்கு அப்பால் இருப்பது என்ன?

மனிதன் மரணம் அடைந்தபின் என்ன நடக்கிறது?

Update: 2019-05-01 04:40 GMT
மரணம் அடைந்தபின் என்ன நடக்கிறது? அவன் உயிர் எங்கே போகிறது? என்பதெல்லாம் விடை தெரியாத புதிராகவே இருக்கிறது. இதுபற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. மரணத்தின் வாசல் வரை சென்று பார்த்துவிட்டு, திரும்பி உயிர் பிழைத்து வந்தவர்களை தேடிப்பிடித்து அவர்களின் அனுபவங்களை புத்தகங்களாக எழுதியிருக்கிறார்கள் சிலர்.

இத்தகைய அனுபவங்களை ஆங்கிலத்தில் என்.டி.இ. என்று அழைக்கிறார்கள். அதாவது ‘நியர் டெத் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று பெயர். பொதுவாகவே நாம் அனைவரும் நம் உடல் மூலமாகவே பார்க்கிறோம். மரணம் ஏற்படும்போது மட்டுமே உயிர் உடலை விட்டுப்பிரிந்து உடலுக்கு அப்பால் இருந்து பார்க்கிறது. இப்படி உடலுக்கு அப்பால் இருந்து ஏற்படும் அனுபவங்களை ‘அவுட் ஆப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

இவை எல்லாம் உடலில் இருந்து உயிர் பிரிந்தப்பின் ஏற்படும் அனுபவங்களாகவே இருந்தது. உயிர் பிரியும் போது நீண்ட கருமையான குகைப் பாதையில் பயணித்ததாகவும், முடிவில் பெரும் பிரகாசமான இடம் இருந்ததாகவும், சிலர் அந்த பிரகாசத்தில் தேவதைகளை கண்டதாகவும், இன்னும் சிலர், இவற்றைத் தவிர தங்கள் உடல் மற்றும் அதன் அருகே இருக்கும் பொருட்கள், நிற்கும் ஆட்கள், அவர்கள் பேசிய பேச்சுகள் ஆகியவற்றை கேட்டதாகவும் கூறுகிறார்கள்.

இவையெல்லாம் உண்மையா? மரணத்திற்குப்பின் இப்படித்தான் நடக்கிறதா? என்று விஞ்ஞானிகளிடம் கேட்டால் ‘இல்லை‘ என்பதுதான் பதிலாக வருகிறது. இது எல்லாம் ஒருவித மயக்கத்தில் உருவாகும் மாயகற்பனை என்று கூறுகிறார்கள்.

மரணத்தை நெருங்கி அனுபவித்தவர்களின் அனுபவங்கள் பலவற்றையும் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வரும் மனநல மருத்துவர் சூசன் பிளாக்மோர் என்பவர் இந்த அனுபவங்கள் எல்லாம் உடலின் பார்வையில் இருந்து வேறுபட்டு, மற்றொரு கோணத்தில் புற உலகினை அறிய மூளை முற்படுவதால் ஏற்படும் கற்பனையான உணர்வு எனக்கருதுகிறார். மரணப்படுக்கையில் இருந்து இந்த அனுபவங்களை பெற்றவர்களுக்கு இது விஞ்ஞான விளக்கங்களுக்கு அப்பால் இருக்கிறது. எனவே மரணத்திற்கு அப்பால் என்ன உள்ளது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

மேலும் செய்திகள்