நிதி ஆண்டின் முதல் மாதத்தில் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி 57% குறைந்தது

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி 57 சதவீதம் குறைந்து இருக்கிறது.

Update: 2019-05-09 09:51 GMT
மூன்றாவது இடம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 2,77,600 பேரல் ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 57 சதவீதம் சரிவாகும். முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இறக்குமதி 31.5 சதவீதம் குறைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, 2018 நவம்பர் முதல் 2019 ஏப்ரல் நம் நாடு அங்கிருந்து நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் எண்ணெய் மட்டும் இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. அங்கிருந்து இறக்குமதி குறைந்ததற்கு இதுவே காரணமாகும்.

கணக்கீட்டுக் காலத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மங்களூரூ ரிபைனரீஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான தேவையும் மிக அதிகமாக இருக்கிறது. எனினும், 2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இறக்குமதி செலவினம்

சென்ற நிதி ஆண்டில் நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி செலவினம் 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகமாகும். 

மேலும் செய்திகள்