15% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்

ரைட்ஸ் நிறுவனத்தின் மேலும் 15% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்

Update: 2019-05-17 01:33 GMT
புதுடெல்லி

ரைட்ஸ் நிறுவனத்தின் மேலும் 15 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பங்கு வெளியீடு

ஆர்.ஐ.டி.இ.எஸ். (ரைட்ஸ்) நிறுவனம் போக்குவரத்து ஆலோசனைகள் மற்றும் பொறியியல் சேவைகளை வழங்கி வருகிறது. ரெயில்வே துறையில் முதலாவதாக இந்நிறுவனம் பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. இந்தப் பங்கு வெளியீடு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்தது.

ரைட்ஸ் வெளியீட்டில் 2.52 கோடி பங்குகள் (12 சதவீதம்) வெளியிடப்பட்டது. அதே சமயம் 169 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தன. அது வெளியீட்டுஅளவைக் காட்டிலும் 67 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே அந்த வெளியீடு அமோக வெற்றி பெற்றது. அதன் மூலம் மத்திய அரசு ரூ.466 கோடி திரட்டிக் கொண்டது.

இந்த நிலையில் ரைட்ஸ் நிறுவனத்தின் மேலும் 15 சதவீத பங்குகளை ஏலமுறையில் (ஓ.எப்.எஸ்) விற்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன் வாயிலாக சுமார் ரூ.700 கோடி திரட்டப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 87.40 சதவீத பங்குகள் இருக்கிறது. 15 சதவீத பங்குகளை விற்ற பிறகு இது 72.40 சதவீதமாக குறையும்.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது இந்நிறுவனப் பங்கு ரூ.233.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.226.05-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.229.40-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.59 சதவீத சரிவாகும்.

விற்பனை இலக்கு

நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாகும். சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்த வழிமுறையில் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் பங்கு விற்பனை அந்த இலக்கைத் தாண்டி ரூ.85 ஆயிரம் கோடியை எட்டியது.

நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.90 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டிற்கான முதல் இலக்கை விட (ரூ.80,000 கோடி) இது 12.5 சதவீதம் அதிகமாகும்.

மேலும் செய்திகள்