மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி... அதிகார அரசியலின் ஆக்கிரமிப்பு!

இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட அரசியல் குடும்பங்கள் உள்ளன.

Update: 2019-05-20 07:43 GMT
வாரிசு அரசியல் என்ற வகையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மொத்த எம்.பி.க்களில் 29 சதவீதம் வாரிசு உரிமையில் வாய்ப்பு பெற்றிருந்தனர் என தெரியவந்தது.

ஆனால், அதற்கடுத்த ஆண்டு இந்த சதவீதம் 21 சதவீதமாக குறைந்துவிட்டது. காரணம் வாரிசு அரசியலை எதிர்த்து உருவான பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபையில் அதிகமாக இடம் பெற்றதேயாகும்.

இந்தியாவில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்த கட்சிகளாக காங்கிரசும், தேசிய மாநாடு கட்சியும் உள்ளன. இவை கடந்த 72 ஆண்டுகளாக வாரிசு அரசியலில் சாதனை படைத்து, தொடர்கின்றன. இருந்தாலும், இன்று வாரிசு அரசியலில் முன்னணி இடத்தை பிடித்த கட்சிகளாக சமாஜ்வாடியும், ராஷ்டிரீய ஜனதா தளம் தொடங்கி புதிதாக உருவான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய எல்லா கட்சிகளுமே கருதப்படுகின்றன.

இதில் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே விதிவிலக்காக உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

வாரிசு அரசியலில் கடைசி இரண்டு இடங்கள் பெற்றவையாக பா.ஜ.க.வும், திரிணாமுல் காங்கிரசும் கருதப்படுகின்றன. வாரிசு அரசியலை தவிர்த்த கட்சிகளுக்கு சமீபகாலமாக மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருவது கண்கூடாகத் தெரிய வருகிறது. 

வாரிசு அரசியலானது அரசியலில் புதிய திறமையாளர்களை புறம்தள்ளுகிறது. அறிவும், ஆற்றலும், அனுபவமும் உள்ளவர்களுக்கு அணைபோடுகிறது. கட்சியிலுள்ள முதுபெரும் தலைவர்களை கூட, தலைவர்களின் இளம் வாரிசுகளிடம் மண்டியிட வைக்கிறது. பலதரப்பட்ட தளங்களிலிருந்து வரும் இளம் ஆற்றலாளர்களை அயர்ச்சியடைய வைக்கிறது.

வாரிசு அரசியல் என்பது அரசியலை அறம் சார்ந்த தளத்திலிருந்து பிறழ வைத்து அரசியலை ஒரு குடும்ப வியாபாரமாக்கி விட்டது. பிரதமர், முதல்வர் பதவியில் இருந்து வார்டு கவுன்சிலர் பதவி வரை பாரம்பரிய உரிமைக்கு பாத்தியதையாக்கி விட்டது. உள்ளாட்சிகளில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களை அந்தந்த கட்சியின் ஆண்கள், கட்சியில் தீவிரமாக பணியாற்றும் பெண்களுக்கு வழங்காமல், தங்கள் மனைவிக்கோ, மகளுக்கோ தரும் போக்கு பரவலாக காணப்படுகிறது.

இதுபோல ஒவ்வொரு கட்சியிலும் விரக்தியடைந்தவர்கள் வெளியேறுவதும், வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது. படித்த இளம் தலைமுறையினர் அரசியலில் ஏதாவது செய்ய விரும்பினாலும் எதுவுமே செய்யமுடியாமல் விரக்தி கொள்ளவைக்கிறது.

வெளிநாடுகளை கூட வாரிசு அரசியல் விட்டுவைக்கவில்லை. அங்கும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்க செனட் உறுப்பினர்களில் 7 சதவீதமும், ஜப்பானில் 20 சதவீதத்தினரும் அரசியல் வாரிசுகளாக உள்ளனர்.

வாரிசுகள் அரசியலுக்கு வருவதே தவறு என்று யாரும் வாதம் வைக்க முடியாது. அவர்கள் அரசியல் குடும்பத்தில் இருப்பதால் அரசியலை எளிதில் கிரகிக்கும் ஆற்றல் இயல்பாகவே கிடைக்கிறது. திறமை இல்லாவிட்டால் யாராலும் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற வாதத்தையும் புறம் தள்ள முடியாது. 


மேலும் செய்திகள்