களம் இறங்க என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனம் திட்டம்

பங்கு வெளியீட்டில் களம் இறங்க என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனம் திட்டம்

Update: 2019-05-24 06:58 GMT
புதுடெல்லி

பங்கு வெளியீட்டில் களம் இறங்க நேஷனல் கமாடிட்டி அண்டு டிரைவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்சு நிறுவனம் (என்.சி.டீ.இ.எக்ஸ்) திட்டமிட்டுள்ளது.

விளைபொருள்கள்

2018 மார்ச் 31 நிலவரப்படி என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில் 27 வகையான விளைபொருள்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்வதற்கு வசதி இருக்கிறது. நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சு, இந்தியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சு ஆகியவையும் இதே துறையைச் சேர்ந்த நிறுவனங்களாகும். நம் நாட்டில் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஒரே விளைபொருள் முன்பேர வர்த்தகச் சந்தை எம்.சி.எக்ஸ். ஆகும். தற்போது

என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தின் 2017-2018 ஆண்டறிக்கையின்படி, அந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் அதிகபட்சமாக ரூ.4,956 கோடி அளவிற்கு ஒரே நாளில் வர்த்தகம் மேற்கொண்டது. இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் நோக்கத்துடன் புதிய பங்குகள் வெளியிட உத்தேசித்துள்ளது.

எனவே அதற்கான ஆலோசனைகளில் அது இறங்கி உள்ளது. தற்சமயம் எஸ்.பீ.ஐ. கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பங்கு வெளியீடு மூலம் ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை திரட்ட அந்நிறுவனம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில் தேசிய பங்குச்சந்தைதான் (என்.எஸ்.இ) மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. அதாவது அதன் பங்கு மூலதனம் அதிகபட்சமாக 15 சதவீதமாக இருக்கிறது. அடுத்து எல்.ஐ.சி. நிறுவனம் 11.10 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. நபார்டு வங்கிக்கு 11.10 சதவீதமும், இஃப்கோவிற்கு 10 சதவீதமும் பங்குகள் இருக்கிறது. ஓமன் இந்தியா ஜாயிண்ட் இன்வெஸ்ட்மெண்ட் பண்டுக்கு 10 சதவீத பங்குகளும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 7.29 சதவீத பங்குகளும் இருக்கின்றன. கனரா வங்கியும், ஐ.டீ.எப்.சி. பிரைவேட் ஈக்விட்டி பண்டும் முறையே 6 சதவீதம் மற்றும் 5 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன.

பங்குதாரர்கள்

என்.சி.டீ.இ.எக்ஸ். பங்கு வெளியீட்டில் சில பங்குதாரர்கள் முழுமையாக தமது பங்குகளை விற்று விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் பகுதி அளவு பங்குகளை விற்பனை செய்து விட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. பங்கு வெளியீட்டுக்கு முன்பாக சில பங்குதாரர்கள் தமது பங்குகளை விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்