ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள்

முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி

Update: 2019-05-25 04:28 GMT
இந்திய நிறுவனங்கள் ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.29 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 290 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 22 சதவீதம் அதிகரித்து ரூ.46 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு (2018-19), பங்கு ஒன்றுக்கு ரூ.3.50-ஐ டிவிடெண்டாக அறிவித்து இருக்கிறது.

பாரத் பைனான்சியல்

பாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.321 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.211 கோடி லாபம் ஈட்டி இருந்தது. ஆக, லாபம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 32 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.646 கோடியில் இருந்து) ரூ.851 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

டீ.எல்.எப்.

டீ.எல்.எப். நிறுவனம், மார்ச் காலாண்டில் ரூ.437 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.248 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 76 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 44 சதவீதம் உயர்ந்து (ரூ.1,845 கோடியில் இருந்து) ரூ.2,661 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.1,319 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீத சரிவாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.7,664 கோடியில் இருந்து) ரூ.9,029 கோடியாக அதிகரித்துள்ளது.

சிப்லா

சிப்லா நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் 133 சதவீத வளர்ச்சியுடன் ரூ.358 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.153 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.3,698 கோடியில் இருந்து) ரூ.4,404 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மொத்த லாபம் 73 சதவீதம் அதிகரித்து ரூ.961 கோடியாக உயர்ந்துள்ளது. வரிச்செலவினம் (ரூ.46 கோடியில் இருந்து) ரூ.127 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதர வருவாய் ரூ.95 கோடியாக உள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.3 இறுதி டிவிடெண்டு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்