இந்தியாவின் வெனிஸ் ‘மன்றோ தீவு’

உப்பங்கழியில் (BACK WATERS) மூழ்கிய முத்தென்று வர்ணிக்கப்படுகிறது கேரளா மாநிலம், கொல்லம் நகரில் இருக்கும் ‘மன்றோ தீவு’.

Update: 2019-06-12 10:43 GMT
சிறிய கால்வாய்களால் பிரிக்கப்பட்ட எட்டு தீவுகளின் கூட்டமே இந்த மன்றோ தீவு. கொல்லம் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த தீவிற்கு சாலை, ரெயில் மற்றும் உள்ளூர் நீர்வழி என்று அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

எனவே இங்கே சென்று வருவது சுலபம். குறுக்கு நெடுக்காக செல்லும் கால்வாய்கள், அதற்கு நடுவே பாலங்கள், ஓங்கி வளர்ந்த தென்னை மரக் கூட்டங்கள், காதுகளை மகிழ்விக்கும் பறவைகளின் சங்கீதம் என்று நம்மை பரவசத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது இந்த தீவு. இங்கே இருக்கும் தங்கும் விடுதிகளில் வீட்டு உணவு போலிருக்கும் கேரள சாப்பாடு சமைத்து தரப்படுகிறது. வாழை இலையில் வேகவைக்கப்பட்ட மீன், தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்பட்ட கோழி என்று நாவூறும் உணவுகளை தீவின் அழகை ரசித்துக் கொண்டே திறந்த வெளியில் உண்டு மகிழலாம்.

மூங்கில் துடுப்புகள் கொண்டு நகர்த்தப்படும் பலா கட்டைகளால் செய்யப்பட்ட ‘வல்லம்’ எனப்படும் படகில் தீவை சுற்றி வரலாம். ஓவியங்களில் காணப்படும் வெனிஸ் நகரத்து நதிகளின் படகு காட்சிகளுக்கு இணையான சுக அனுபவத்தை ஏற்படுத்தும் இந்த எழில் மிகு படகு சவாரி. இதனாலேயே மன்றோ தீவு இந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படுகிறது.

இங்கே மோட்டார் படகுகள் இயக்கப்படுவதில்லை. நீரின் போக்கிலேயே நகர்ந்து செல்லும் இந்த பயணம், ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்று நம்மை பாட வைக்கும். கடல் மட்டத்திலிருந்து ஒன்பதடி உயரத்திலிருக்கும் இந்த தீவில் ஏராளமான தென்னை மரங்கள் இருப்பதால் கயிறு திரித்தல், தேங்காய் வெட்டுதல் போன்ற தொழில்கள் இங்கே காணப்படுகின்றன. வலை விரித்து மீனவர்கள் மீன்பிடிக்கும் அழகை நாள் முழுவதும் பார்க்கலாம். இடம் பெயர்ந்து வந்த பல வண்ணப் பறவைகளை இங்கே காண முடிகிறது. 1878-ம் ஆண்டு கேரள கட்டிடக்கலையில் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்றும் இங்கே இருக்கிறது. இயற்கை ஒலிகள் மட்டுமே கேட்கும் ஓரிடம் இன்னமும் இந்த பூமியில் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையாக நிற்கிறது ‘மன்றோ தீவு’.

மேலும் செய்திகள்