தேசிய மகளிர் ஆணைய பணிகள்

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது.

Update: 2019-06-13 06:47 GMT
தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக 1990-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.

பெண்களின் நலன் தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்த சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றையும் ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களை செய்ய பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது.

பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களை பெற்று அவற்றின் அடிப்படையிலும், குற்றச் செயல்களை அறிந்து தாமாகவும் நோட்டீஸ் அனுப்பி இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவி, ஆதரவு, சட்ட கவனிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மகளிர் ஆணையம் இவ்வாறு செய்கிறது.

வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு வசதியாகவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன மற்றும் சட்ட பாதுகாப்புகளை ஆய்வு செய்வது, சட்ட தீர்வுகளை பரிந்துரைப்பது, குறைகளை தீர்க்க உதவி செய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்டவைதான் தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள் ஆகும்.

மேலும் செய்திகள்