மே மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 15% அதிகரிப்பு

மே மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 15 சதவீதம் அதிகரித்து 2.40 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

Update: 2019-06-18 12:11 GMT
அனல்மின் நிலையங்கள்

2017-18-ஆம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 20.80 கோடி டன்னாக இருந்தது. அந்த ஆண்டில் அனல்மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 13 சதவீதம் குறைந்து 5.64 கோடி டன்னாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) 23.36 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீதம் அதிகமாகும். அதில், கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரி இறக்குமதி 4.77 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. சாதாரண நிலக்கரி இறக்குமதி 13 சதவீதம் உயர்ந்து 16 கோடி டன்னாக உள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதத்தில் 2.40 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 15 சதவீதம் அதிகமாகும். அப்போது இறக்குமதி 2.10 கோடி டன்னாக இருந்தது. இதில் சாதாரண நிலக்கரி இறக்குமதி 1.77 கோடி டன்னாக இருக்கிறது. உயர்தர நிலக்கரி (கோக்கிங் கோல்) இறக்குமதி 38 லட்சம் டன்னாக இருக்கிறது. முந்தைய மாதத்தில் (ஏப்ரல்) அது 2.63 கோடி டன்னாக (மறுமதிப்பீடு) இருந்தது.

கடந்த 2018 காலண்டர் ஆண்டில் 17.18 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 19 சதவீதம் உயர்வாகும். இதில் உயர்தர நிலக்கரி இறக்குமதி, 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 14 சதவீதம் அதிகரித்து 5.23 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது.

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 61 கோடி டன்னாக இருந்தது. எனினும் 60.7 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்து இருந்தது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. முந்தைய ஆண்டை விட இது 5 கோடி டன் அதிகமாகும். 2025-26-ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மதிப்பீடு

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், நிலக்கரி இறக்குமதி 8 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும், நிலக்கரி உற்பத்தி 6-7 சதவீதம் உயரும் என்றும் கேர் ரேட்டிங் நிறுவனம் மதிப்பீடு செய்து இருக்கிறது.

மேலும் செய்திகள்