மோடி: துலாபார பூக்களின் பின்னணி ரகசியங்கள்

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்தார். அப்போது துலாபாரம் நடத்தி, தனது எடைக்கு எடை தாமரை பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தார்.

Update: 2019-06-23 10:22 GMT
துலாபாரத்தில் பிரதமரின் பிரார்த்தனை
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாக விளங்குவதால் அவர் தாமரை பூவால் துலாபாரம் நடத்தியிருந்தாலும், தனக்கு நேராக வீசப்படும் அரசியல் கற்கள் ஒவ்வொன்றும் பூவாக மாறவேண்டும் என்பது அவரது பிரார்த்தனையாக இருந் திருக்கும்.

அந்த துலாபார தாமரை பூக்களின் பின்னணி ரகசியங்கள்:

துலாபாரம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடந்திருந்தாலும், அதற்கு பயன்படுத்திய தாமரைபூக்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்றது. இதில் ஒற்றுமை என்னவென்றால் தமிழ்நாடு, கேரளா இரண்டிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் சுசீந்திரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து அந்த பூக்கள் சேகரிக்கப்பட்டிருந்தது.

மோடியின் துலாபாரத்திற்காக 91 கிலோ பூக்களே தேவைப்பட்டிருந்தாலும், 111 கிலோ பூக்கள் சேகரிக்கப்பட்டிருந்தது. அதை தவிர தனியாக 80 கிலோ பூக்களும் சேகரித்துவைத்திருந்தார்கள். முதல் நாள் இரவிலே சேகரிக்கப்பட்ட பூக்கள், துலாபாரம் நடந்த அன்று அதிகாலையில் குருவாயூர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு அதி காரிகள் அந்த பூக்களை எல்லாம் சோதனைக்கு உட்படுத்தினார்கள்.

துலாபாரம் நடந்த அன்று தாமரைபூக்களின் மார்க்கெட் விலை கிலோவுக்கு 200 ரூபாய். துலாபாரம் நடத்தும் பணியை மோகனன் என்பவர் குத்தகைக்கு எடுத்திருக் கிறார். அவரது மேற்பார்வையிலே துலாபார வழிபாடு நடக்கிறது.

மோடி பயபக்தியோடு துலாபார வழிபாட்டில் கலந்துகொண்டார். பின்பு அந்த தாமரைபூக்கள் அனைத்தும் கோவில் முறைப்படி ஏலம் விடப்பட்டது. அதனை உன்னிக்கண்ணன் என்ற ஆசிரியர் ஏலம் பிடித்தார். ‘பிரதமர் துலாபாரம் செய்த பூக்கள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்று, உன்னிக்கண்ணனின் நண்பர்கள் பலர் வெளிநாட்டில் இருந்து கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர் ஏலம் எடுத்திருக்கிறார்.

அவர் ஏலம் பிடித்த பூக்களோடு வெளியே வந்தபோது கோவிலில் கூடி நின்றிருந்த பக்தர்கள் தங்களுக்கும் தாமரை பூ வேண்டும் என்று கேட்டிருக் கிறார்கள். கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்துவி்ட்டு, குறைந்த அளவு பூக்களோடு உன்னிக்கண்ணன் வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

துலாபாரத்தின் தத்துவம், ‘தனது வாழ்க்கையை ஒருவர் கடவுளுக்கு சமர்ப்பணம்’ செய்வது என்பதாகும். அதனை உணர்த்தும் விதத்தில் தனது எடைக்கு நிகரான பொருளை அவர் கடவுளுக்கு வழங்கு கிறார். துலாபார வழிபாட்டில் எடைக்கு எடை கொடுக்க, குருவாயூர் கோவில் நிர்வாகம் 150-க்கும் மேற்பட்ட பொருட் களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. சர்க்கரை, வெல்லம், இளநீர். குறிப்பிட்ட வகை வாழைப்பழங்களை பெரும்பாலானவர்கள் துலாபாரமாக வழங்குகிறார்கள். பூக்களை துலாபாரம் கொடுப்பவர்களில் அனேகம் பேர் துளசியை வழங்குகிறார்கள். இதற்கான துளசி, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

ஒருவர் துலாபாரத்தின் மூலம் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்த பொருளை, மீண்டும் இன்னொருவர் கடவுளுக்காக பயன்படுத்த முடியாது. அதனால்தான் அந்த பொருளை உடனே ஏலம் விட்டுவிடுகிறார்கள். சர்க்கரை, வெல்லம் போன்று மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைதான் பலரும் ஏலம் எடுப்பார்கள். ஆனால் பூக்களை யாரும் ஏலம் கேட்பதில்லை. அவை அப்படியே உலர்ந்துபோவதுதான் வாடிக்கை. ஆனால் ‘மோடிப்பூக்கள்’ ஏலம் விடப்பட்டு மக்களின் வீடுகளை சென்றடைந்துவிட்டது.

மேலும் செய்திகள்