வைகோவுக்கு வாய்ப்பிருக்கிறதா?

தமிழகத்தில் வருகிற 24-ந் தேதியுடன் 6 மேல்சபை (மாநிலங்களவை) உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2019-07-09 04:45 GMT
இன்றைய நிலவரப்படி தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் சட்டசபையில் தங்களின் பலத்திற்கேற்ப தலா மூவரை தேர்ந்தெடுக்க முடியும்.

அதன்படி தி.மு.க.வின் சார்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் ம.தி.மு.க. தலைவர் வைகோவிற்கு ஒரு இடமும் அறிவிக்கப்பட்டது. அதேபோல அ.தி.மு.க. சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க.வின் அன்புமணி ஆகியோர் என முடிவாகியுள்ளது.

இந்த நிலையில் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் நடந்த போர் தொடர்பாக இந்திய அரசை குற்றம் சாட்டி பேசியதாக பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில் அரசியல் சட்டப்பிரிவு 124 ஏ-யின் படி ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த தண்டனைக்காக வைகோ கலங்கவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால், தீர்ப்பானது ம.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் தந்துள்ளது.

இதற்கிடையில், வைகோவுடன் ஆலோசனை செய்தார் மு.க.ஸ்டாலின். சட்டப்படி பாதிப்பில்லை என்றாலும் கடைசி நேரத்தில் வைகோவின் மனு ஒருவேளை நிராகரிக்கப்படுமானால், பிறகு தனியாகத்தான் ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் நடத்துவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், தி.மு.க.விற்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய அந்த ஓரிடம் பறிக்கப்பட்டுவிடும்.

எனவே, ஒரு தற்காப்புக்காக மாற்று வேட்பாளராக தி.மு.க. வழக்கறிஞர் அணியின் என்.ஆர்.இளங்கோவை களத்தில் நிறுத்தலாம் என்ற வைகோவின் ஆலோசனைப்படி களத்தில் இறக்கியுள்ளார், மு.க.ஸ்டாலின். இவர் கோடநாடு கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரியவர். தமிழக உள்ளாட்சி தொடர்பான வழக்கிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

வைகோ மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில் இளங்கோ போட்டியிடுவார். வைகோ மனு நிராகரிக்கப்படாத பட்சத்தில் இளங்கோ மனுவை வாபஸ் பெறுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் வைகோ மீதான குற்றசாட்டும், தண்டனையும் அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவோ, பதவி ஏற்கவோ தடையில்லை என பிரபல வக்கீல் கே.விஜயன், நீதியரசர் சந்துரு போன்றோர் ஊடகங்களில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மூத்த வக்கீல் காந்தியிடம் கேட்டபோது, “சட்டப்படி நிச்சயமாக வைகோவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தண்டனை பெற்றது ஓராண்டு தான். இரண்டு ஆண்டுக்கு மேல் என்றால் தான் பிரச்சினை. ஆகவே அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8-ன் கீழ் அவர் போட்டியிடவோ, பதவி ஏற்கவோ எந்த தடையுமில்லை” என்றார்.

ஆனால், பா.ஜ.க. ஆதரவு வக்கீலான ராமசுப்பிரமணியம், “சட்டப்படி தப்பில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் அவர் தொடர்ந்து தேச துரோகமான வகையில் பேசி வருகிறார். அப்படி எனும் போது அவர் எப்படி இந்திய அரசியல் அமைப்பிற்கு விசுவாசமானவனாக செயல்படுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளமுடியும்? என்பது தான் எங்கள் கேள்வி. அந்த வகையில் அவரை தேர்தல் அதிகாரி, தகுதியற்றவர் என்று நிராகரிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், தேர்தல் அதிகாரி சுயமாக ஒரு முடிவு எடுத்தால் அதை யாரால் தடுக்க முடியும்? ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார்.

முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், “அரசியலமைப்பு சட்டப்பிரிவு 191-ன் கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8-ன் படியும் வைகோவின் வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை அவரை தகுதியற்றவராக்க முடியாது. ஆனால், வேறு சில வழக்குகளிலோ ஒருவர் அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலோ கூட தகுதி இழக்க வாய்ப்புண்டு. அதே சமயம் ஆளும் தரப்பினரின் நிர்ப்பந்தம் காரணமாக அவர் தகுதி இழப்பு செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனில், அதை நாம் நீதிமன்றம் சென்றுதான் நீதி கேட்கமுடியும்” என்றார்.

இவை ஒருபுறமிருக்க, “குற்றவியல் சட்டப்பிரிவு 124 ஏ என்பது இன்னும் தேவையா?” என்ற ஒரு விவாதமும் பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த 124 ஏ பிரிவானது அடிமை இந்தியாவில் சுதந்திரம் வேண்டிய மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த பிரிவை கொண்டு தான் அன்று திலகர் முதல் காந்தி வரை சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை வழங்கியுள்ளது. ஒரு அரசாங்கத்திற்கு எதிரான மாற்று கருத்தையே தேச துரோகமாக கருதுவது சரியாகுமா? இது மாற்று கருத்தாளர்களை ஒடுக்குவது ஆகாதா? என்ற கருத்தும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

ம.தி.மு.க.வினர் சிலரிடம் பேசியபோது, “வைகோ பதவி ஆசையில்லாதவர். பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கைவாதி” என்று முன்னாள் மக்களவை சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியே கூறியுள்ளார். அவ்வளவு ஏன்? பா.ஜ.க.வின் பெருந்தலைவரான வாஜ்பாய்கூட, “வைகோ ஒரு கொள்கைவழி அரசியல்வாதி, அவரை என் மகனை போல கருதுகிறேன்” என புகழ்ந்துள்ளார். ஆனால், இப்போதுள்ள பா.ஜ.க. தான் எங்கே இவர் வந்து மாநிலங்களவையில் மக்கள் பிரச்சினைகளுக்காக கர்ஜனை செய்துவிடுவாரோ? என்று தடுக்க பார்க்கி றது...” என்கிறார்கள்.

மேலும் செய்திகள்