காதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..! தடுக்க நினைக்கும் கோர்ட்டு; தனிசட்டம் இயற்ற தயங்கும் அரசு

கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடந்த 5 ஆணவப் படுகொலைகள் தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளன. ‘கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?’ என தானாக முன்வந்து வழக்குப்பதிந்து விடை கேட்டுள்ளது சென்னை ஐகோர்ட்டு.

Update: 2019-07-13 06:05 GMT
ஜூன் 25 தொடங்கி ஜூலை 5-ந் தேதிக்குள்ளான 10 நாட்களில் 5 கவுரவக் கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம், ‘கவுரவக் கொலைகளை முன்கூட்டியே தடுக்க, இவை அதிகமாக நடக்கும் மாவட்டங்களை கண்டறிய ஒவ்வொரு மாநில உள்துறை செயலாளர்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் போலீசாரும், மாவட்ட கலெக்டரும் கலப்பு சாதி திருமண ஜோடிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியதா?. அதுகுறித்த தகவல்களை கோர்ட்டில் ஒப்படையுங்கள். கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை இல்லையா?’ என்று கேட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூரின் சமத்துவபுரமான பெரியார் நகர் சோலைராஜ், பல்லாகுளம் பேச்சியம்மாளை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். இரண்டு மாதம் கடந்த நிலையில் பேச்சியம்மாள் கர்ப்பமடைந்தார். இதை கேள்வியுற்ற பேச்சியம்மாளின் தந்தை அழகர் இரவோடு இரவாக தூங்கிக்கொண்டு இருந்த ஜோடியை வீடு தேடி சென்று வெட்டிக்கொன்றது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த இருவருமே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தில் வருகிறவர்கள் என்றாலும், வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியது. ஆக, சாதிகளின் படி நிலையில் ஒரு படி தங்களை உயர்வாக கருதக் கூடிய பிரிவினர் தங்களுக்கு கீழ்நிலையில் இருப்பவர்களாக கருதப்படுகிறவர்களிடம் எந்த விதமான திருமண உறவையும் வைக்க விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல, அதை கவுரவ குறைவாக கருதுகிறார்கள் என்பது தான், தொடர்ந்து நடைபெற்று வரும் கவுரவக் கொலைகள் உணர்த்தும் உண்மையாகும்.

‘இதை எப்படி கவுரவக்கொலை என்று பெயரிட்டு அழைக்கிறீர்கள்? இது காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அல்லவா?’ என்று நமது சுப்ரீம் கோர்ட்டு கேட்டது. ஆகவே, தமிழ் சூழலில் இதுபோன்ற கொலைகளை ஆணவக்கொலை என்ற பெயரிலேயே குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக சாதி ஆதிக்கம் என்பது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக வேர் விட்டு கிளை பரப்பியுள்ள நிலையில் நவீன சட்டங்கள், மாறிவரும் வாழ்வியல் பார்வைகள்...., சாதி உணர்வையும், அதன் தீவிரத்தையும் ஓரளவிற்கே மட்டுப்படுத்தியுள்ளது.

1990 வரை தமிழக காவல்துறை பதிவுகளில் கவுரவக் கொலை என்ற பதிவை அனேகமாக பார்க்க முடியாது. ஆனால், அப்போதும் கவுரவக் கொலைகள் இல்லாமல் இல்லை. அந்த காலகட்டத்திற்கு முன்பெல்லாம் அப்படி நடக்கும் கொலைகள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. அதை பேசவே பயந்த காலமாக இருந்த நிலை மாறி, இன்று அவை விவாதத்திற்கு மட்டுமின்றி, அரசும், நீதிமன்றமும் இதை மிகக்கடுமையாக பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.

இது ஏதோ இந்தியாவில் மட்டும் என்றில்லை. உலகம் முழுமையும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. ஐ.நா. சபை 2000-ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 20 ஆயிரம் கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதில் 20 சதவீதம் இந்தியாவில் நடக்கின்றன.

கவுரவக்கொலைகள் நடப்பதற்கான காரணங்கள்

தங்கள் விருப்பப்படி தான் பிள்ளைகள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு சிதைவடைவதால்... அந்த ஏமாற்றத்தை தாங்கமுடியாமல்...

சமூக அடுக்கில் கீழ் நிலையில் இருக்கும் சாதியுடன் மன உறவு வைக்கும்போது கவுரவம் பாதிக்கப்படுவதாக எழும் மனஉளைச்சல்கள்.

பெற்றோர்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பிள்ளைகள் துரோகம் இழைத்துவிட்டார்கள் எனக்கருதுவது.

சொந்த சாதியில் உள்ளவர்களின் ஏச்சுக்கும், ஏளனத்திற்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற மன அழுத்தம்.

சுயசாதிப் பற்றும், குறுகிய பார்வையும் புதிய உறவுகளை ஏற்க மறுப்பது.

பாலினக் கவர்ச்சிக்கு ஆளாகி தவறான துணையை தன் பிள்ளை தேர்ந்தெடுத்துவிட்டதாக பெற்றோருக்கு உண்டாகும் ஆத்திரம்.

கவனம் பெற்ற கவுரவக் கொலைகள்

2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முருகன், கண்ணகி இருவரும் காதலித்த காரணத்தால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.

2012-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியை சேர்ந்த இளவரசன், திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி இளவரசனின் பெற்றோர்களால் முழுமனதாக ஏற்கப்பட்ட நிலையில், திவ்யாவின் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டது. முடிவில் திவ்யா இளவரசனிடம் இருந்து பிரிக்கப்பட்டார். இளவரசன் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

2015-ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூபதிபுரம் கிராமத்தை சேர்ந்த விமலாதேவி பெற்றோரால் கொல்லப்பட்டார். ஆனால், தற்கொலை என போலீஸ் ஆதரவுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், விமலாதேவியை காதலித்த திலீப்குமார் இது தற்கொலையல்ல, கொலை என கோர்ட்டுக்கு சென்று நிரூபித்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் போலீசார் கவுரவக் கொலைகளுக்கு துணை போகக்கூடாது என கண்டித்ததோடு இதுபோன்ற சாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிப்பிரிவையே தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார். ஆனால், இதுவரை அதற்கான தனிச்சட்டம் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

2015-ம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற இளைஞர் காதலித்த காரணத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் துணிச்சலாக களம் இறங்கி விசாரித்த போலீஸ் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவும் உயிர் இழக்க நேரிட்டது.

2016-ல் திருச்செங்கோடு சந்தோஷ், சுமதியை காதலித்ததை சுமதியின் பெற்றோர்கள் ஏற்ற நிலையில், சந்தோஷின் பெற்றோர் ஏற்கவில்லை. பிறகு ஏற்றுக்கொள்வதாக சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர். வங்கி மேலாளரான மகன் வெளியூர் சென்ற நிலையில், மருமகள் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டனர். இதனால் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் சந்தோஷின் பெற்றோர்.

நாமக்கல் வாழ்வந்தி கிராமத்தின் ஐஸ்வர்யா தான் பார்த்த மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் மகளை எரித்து கொலை செய்தார் தந்தை தங்கராஜ். இவர் தற்போது சிறையில் உள்ளார்.

2016-ல் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை காதலித்தார். இதனை விரும்பாத கவுசல்யாவின் தந்தை சங்கரை நடுவீதியில் வைத்து வெட்டிக் கொன்றார். இந்த வழக்கில் கவுசல்யாவின் குடும்பத்தில் ஆறு பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 192 சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இதில் ஆறு சம்பவங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமான ஆணவப் படுகொலைகள் கவனப்படுவதேயில்லை. அதாவது பத்தில் ஒன்று தான் கவனம் பெறுகின்றன என சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

தமிழகத்தை விட, வட இந்தியாவில் சாதி ஆணவக்கொலைகள் அதிகம்.

2018-ல் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூவர் அடங்கிய அமர்வு கவுரவக் கொலை தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் தொடுத்த வழக்கில், கவுரவக் கொலைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு மாபெரும் களங்கமாகும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கவுரவக் கொலைகளை தடுக்க வேண்டும். சாதி கலப்பு மணம் புரிந்த இளம் ஜோடிகள் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டரையோ, போலீசையோ அணுகும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அச்சுறுத்தலுக்கு காரணமானவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது.



இன்னும் 30 ஆண்டுகளில் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணங்கள் இருக்காது: நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார்: நான் சினிமாத்துறையில் பல பெண்களோடு நடித்துள்ளேன். ஆனால், என் தாய் சொல்லும் பெண்ணை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் என் மகன் சூர்யா தன்னோடு நடிக்கும் சக கலைஞரான ஜோதிகாவை காதலித்தார். முதலில் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால், அவர்கள் காதல் உண்மையானது, உறுதியானது என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்காக அவர்கள் இருவரும் 4 ஆண்டுகள் பொறுமை காத்தனர். என்னை பொறுத்தவரை மனிதம் தான் முக்கியம் என்று கருதுகிறேன். அதனால் தான் நாங்கள் நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளை 95 சதவீதம் சமூகத்தில் அடிமட்ட நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளை தேடி கண்டறிந்து தருகிறோமேயன்றி, சொந்த சாதியில் உள்ளவர்களுக்கு தர வேண்டும் என எண்ணவில்லை.

காதலிக்கும் இளம் தலைமுறைக்கு நான் ஒன்று சொல்வேன். உங்களை அரும்பாடுபட்டு வளர்க்கும் பெற்றோர்களின் உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள். தன் மகளோ, மகனோ ஏமாற்றப்பட்டு விடக்கூடாது என்பது தான் ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாகும். ஏமாற்றுவதற்கு என்றே காதலிப்பவர்களும் இந்த சமூகத்தில் உண்டு. ஆனமட்டும் அனுபவித்து ஓடி விடுபவர்களும் உண்டு. அதை மறந்துவிடாதீர்கள்.

அவர்களிடம் தாங்கள் செல்லமாக வளர்த்த பெண் பலியாவதை எந்த பெற்றோரால் தாங்க முடியும்? எனவே காதலித்தால் அதை வெளிப்படையாக உங்கள் பெற்றோருக்கு தெரிவியுங்கள். அவர்கள் அனுபவத்தில் எடுக்கும் முடிவு நியாயமானதாக இருந்தால் கட்டுப்படுங்கள். அதேபோல தங்கள் குழந்தை சரியான துணையை தான் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை உணர்ந்தால், பெற்றோர்கள் தயங்க கூடாது. இன்னும் 30 ஆண்டுகளில் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணம் என்பதே வழக்கொழிந்து போகவும் வாய்ப்புள்ளது.

நடிகை ரோகிணி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர்): பிள்ளைகள் காதலிக்கும்போது பெற்றோர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எப்படி பல நவீன அறிவியல் சாதனங்களை ஏற்றுக்கொண்டு நாம் பழமையிலிருந்து வெளியேறி உள்ளோமோ, அதேபோல சாதிய பிற்போக்குத் தனங்களில் இருந்தும் விடுபட வேண்டும். காவல்துறையினர் தான் இந்த பிரச்சினையை முதலில் அணுகுபவர்களாக உள்ளனர். ஆகவே, அவர்களுக்கு இதில் சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி தர வேண்டும். காதல் ஜோடி போலீஸ் நிலையம் வந்தால் கனிவோடு அணுகி பாதுகாப்பு தர வேண்டும். இதற்கு நீதிமன்றம் கூறிய வழிமுறைகள் உள்ளன. சாதி கலப்பு திருமணம் செய்பவர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். சாதி ஆணவக்கொலைகளை தடுக்க விரைவில் அரசு தனிசட்டம் இயற்ற வேண்டும். ஒரே ரத்த உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை விடவும் வேறு, வேறு ரத்தக் கலப்பில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக, புத்திசாலிகளாக இருப்பார்கள் என்பது மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

மேலும் செய்திகள்