உஷாரய்யா உஷாரு..

அதிகாலை நேரத்திலே அந்த ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ரெயிலில் ஏறுவதும், இறங்குவதுமாக எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘சைல்டு ஹெல்ப்லைன்’ குழுவை சேர்ந்த இரண்டு பெண்கள் அங்கும் இங்குமாக நின்றபடி கூட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

Update: 2019-07-14 04:30 GMT
பெற்றோரிடம் சண்டையிட்டுக்கொண்டோ, காதலனை நம்பியோ வீட்டைவிட்டு வெளியேறும் சிறுமிகளில் சிலர் ரெயில் நிலையத்தில் வந்திறங்கி, அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பெண்களை கண்காணித்து, மீட்டு பெற்றோரிடம் கொண்டுபோய் சேர்ப்பது அந்த ‘ஹெல்ப்லைன்’ பெண்களின் பணி.

அங்கும் இங்குமாக கடந்துசென்றுகொண்டிருந்த பயணி களுக்கு மத்தியில் பிளாட்பாரம் ஒன்றின் ஒதுக்குப்புறமான பகுதியில் வெகுநேரம் நின்று பேசிக்கொண்டிருந்த ஜோடி ஒன்று, அந்த பெண்களின் கண்ணில்பட்டது. அந்த ஜோடியின் கண்களில்படாத அளவுக்கு அவர்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் பள்ளி மாணவன் போல் தெரிந்தான். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பது அவனது தோற்றத்திலும், உடல்மொழியிலும் தெரிந்தது. அவனோடு எந்த விதத்திலும் பொருத்தமில்லாதவளாகவும்- அவனைவிட நாலைந்து வயது அதிகமானவளாகவும் அந்த பெண் காணப்பட்டாள். சுடிதார் அணிந்திருந்த அவள் தன்னை யாராவது பார்க் கிறார்களா என்று அங்கும் இங்குமாக அவ்வப்போது பார்த்தபடியே அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

ஹெல்ப் லைன் பெண்களுக்கு இந்த இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் வந்தது. அவர்கள், அந்த ஜோடியை நெருங்கிவந்தார்கள். அப்போது அந்த சுடிதார் பெண், அங்கிருந்து வெளியேறிவிடலாம் என்று அவனை அழைத்தாள். ஆனால் அவனோ தயங்கினான். அவனிடம் சற்று கனமாக விலை உயர்ந்த பை ஒன்று இருந்தது. அதை அவள், தான் தூக்கிவருவதாக கூறி தன்னிடம் தரும்படி கேட்டாள். அவனோ பையை அவளிடம் கொடுக்க மறுத்தான்.

அதை எல்லாம் பார்த்ததும் ஹெல்ப்லைன் பெண்கள் இருவரும், அவர்கள் அருகில் சென்றனர். அவர்களை அடையாளங்கண்டு சுடிதார் பெண் பதற்றமானாள். அவர்கள் இருவரிடமும் ஹெல்ப்லைன் பெண்கள் விசாரித்தார்கள்.

விசாரணையில் அவன் சற்று தூரத்தில் உள்ள பகுதி ஒன்றை சேர்ந்த பிளஸ்-டூ மாணவன் என்பது தெரியவந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். அவனது தாயார் அரசுத்துறை ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுபவர். அவனுக்கும்- இந்த சுடிதார் பெண்ணுக்கும் ‘பேஸ்புக்’ மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இவன் பிளஸ்-டூ படிப்பதை தெரிந்துகொண்டு அவள் தன்னையும் பிளஸ்-டூ மாணவிபோல் காட்டிக்கொண்டு நட்பை தொடர்ந்திருக்கிறாள். அவனிடம் அந்தரங்கமாகவும் பேசியிருக்கிறாள். அவனது தாயும், தந்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். அவன் தாயிடம் வளர்கிறான். அவன் தனது குடும்ப பிரச்சினைகளை எல்லாம் மனந்திறந்துகொட்டியிருக்கிறான். இவள் ஆறுதல் கூறும் விதத்தில் பேசி எப்படியோ அவனை தன் வலைக்குள் விழவைத்து, கையில் கிடைத்த நகை மற்றும் பணத்தோடு தன்னை சந்திக்க வரும்படி கூறியிருக்கிறாள். அவனது வீட்டில் அதிக அளவு பணம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் தாயார் பெருமளவு நகையை வீட்டில் வைத்திருந்திருக்கிறார். தாயாருக்கு தெரியாமல் அவன் நகைகளை எடுத்து பையில் போட்டு கொண்டு வந்திருக்கிறான்.

இங்கு வந்த பின்புதான் அவன் இவளை முதல் முறையாக பார்த்திருக் கிறான். பார்த்ததுமே அவள் தன் வயதை ஒத்த மாணவி இல்லை என்பதும், வயது முதிர்ந்த பெண் என்பதும் அவனுக்கு புரிந்துவிட்டது. தன்னை அவள் ஏமாற்றிவிடுவாள் என்று பயந்திருக் கிறான். அதனால்தான் தங்க நகைகள் அடங்கிய பையை அவளிடம் கொடுக்க மறுத்திருக்கிறான்.

ஹெல்ப் லைன் பெண்கள், இருவரிடமும் விசாரித்துக்கொண்டிருந்த நேரத்தில் அதை நோட்டமிட்ட நிலையில் இன்னும் சில ஆண்களும் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், இந்த சுடிதார் பெண்ணின் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததும், ஹெல்ப் லைன் பெண்கள் போலீஸ் உதவியை நாடினார்கள். உடனே அந்த சுடிதார் பெண் ‘எனக்கு இவன் யார் என்றே தெரியாது. என் வயதை ஒத்த இளைஞன் என்று நினைத்துதான் இவனிடம் பழகினேன். ஆனால் இவன் ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான். அதனால், இவனை பார்த்ததும் இவனுக்கு நல்லபுத்தி சொல்லி அவனது தாயாரிடம் அனுப்பிவைக்கத்தான் நான் முயற்சித்தேன்’ என்று கூறிவிட்டு, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டத்தோடு கலந்து நழுவிச்சென்றுவிட்டாள்.

அந்த மாணவனிடம் பேசியபோது, ‘என் அம்மா கர்வம் பிடிச்சவங்க. அதனால அப்பா நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பிரிந்துபோய்விட்டார். அம்மா எப்போ பார்த்தாலும் என்னை படி.. படின்னு டார்ச்சர் பண்ணுவாங்க. அதனால அம்மாவை பார்த்தாலே எனக்கு கோபம் வரும். அப்போதுதான் பேஸ்புக்கில் இவங்க நட்பு கிடைத்தது. ஜாலியாக பேசினாங்க. என் மீது அன்பு காட்டினாங்க. ‘நீ பணத்தோடு வந்திடு. நாம் கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக ஊர்சுற்றலாம். உன்னை டார்ச்சர் செய்யும் அம்மாவை இப்படித்தான் பழிவாங்கணும். உன்னை காணாமல் அவர்கள் அழுதுபுலம்பி மாநிலம் முழுக்க தேடட்டும். கொஞ்ச நாட்கள் கழித்து திரும்பி வந்திடலாம்’ன்னு சொன்னாங்க. அவங்க வார்த்தையை நம்பி வந்திட்டேன். அந்த பெண்ணை பார்த்த பின்புதான் அவள் ஏமாற்றுக்காரி என்பது தெரிந்தது. நல்ல நேரம் என்னை நீங்க காப்பாற்றிவிட்டீர்கள்’ என்றிருக்கிறான்.

அம்மாக்களே எப்படி எல்லாம் நடக்குது பார்த்தீங்களா?!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்