அழகுக்கு இது பேரழகு

‘மலைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் அழகிய மலை பிரதேசம், முசோரி.

Update: 2019-07-21 11:23 GMT
‘நம்பிக்கை சுவர்’ உருவாக்கப்பட்டிருக்கும் காட்சி.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே அமைந்திருக்கும் இது, பச்சை கம்பளம் விரிக்கும் மலைமுகடுகளுடனும், சுற்றுலா பயணிகளை நெருங்கி வந்து ஈர்க்கும் வான் மேகக்கூட்டங்களுடனும் காணப்படும். 

இங்கு 30 ஆயிரம் பேர் மலை முகடுகளுக்கு மத்தியில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். அங்கு ஆண்டுக்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இயற்கை வன பிரதேசமாக விளங்கிய இப்பகுதி நகர மயமாதலின் பிடியில் சிக்கி தன் அழகை இழந்து கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வனப்பகுதி பாழாக்கிக்கொண்டிருக்கிறது.

இயற்கையின் மகிமையை மீட்டெடுக்கும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ‘நம்பிக்கை சுவர்’ என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடந்தேறி உள்ளது. இந்த சுவர் 1500 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை பிளாஸ்டிக் பாட்டில்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அவை பிளாஸ்டிக் பாட்டில்கள்தானா? என்று ஆச்சரியப்படும் நோக்கில் நேர்த்தியாக அவற்றை வெட்டி வர்ணம் தீட்டி இருக்கிறார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருப்பது போல் மிளிருகிறது.

கோவா அருங்காட்சியகத்தின் நிறுவனர் சுபோத் கெர்பர் இந்த பிளாஸ்டிக் சுவரை வடிவமைத்துள்ளார். 50-க் கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து இதற்காக பணியாற்றி உள்ளனர். மலைவாசஸ்தலத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து, சுத்தமாக பராமரிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளும், மலைவாழ் மக்களும் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு சுவரை உருவாக்கி இருக்கிறார்கள்.

‘‘இந்த சுவரை உருவாக்குவதற்கு நாங்கள் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை சேகரிப்பவர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுடன் இணைந்து செயல்பட்டோம். அவர்கள் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து உதவினார்கள். மலை வாழ் மக்களும், தன்னார்வலர்களும் பாட்டில்களை வெட்டுவதற்கும், அதில் வண்ணங்கள் தீட்டுவதற்கும் உதவினார்கள். இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டு இந்த சுவரை வடிவமைத்துள்ளோம்’’ என்கிறார், தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அரவிந்த் சுக்லா.

இயற்கை அழகுக்கு இந்த சுவர் புதுப்பொலிவை தருகிறது.

மேலும் செய்திகள்