உடலுக்கு கவசமாகும் ‘சருமம்’

நமது சருமம் உடல் இயக்க செயல்பாடுகள் சீராக நடைபெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-21 11:29 GMT
அதனால் அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் மாசு, புற ஊதா கதிர்வீச்சு போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதுதான் சருமத்தின் முதன்மை பணியாக இருக்கிறது.

நோய் கிருமிகளை உருவாக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து உடலை பாதுகாப்பதிலும் சருமம் முக்கிய பங்கு வகிக்கிறது. அழுக்கு, எண்ணெய் பசை தன்மை போன்றவற்றை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது. சருமத்தின் வெளிப்புற அடுக்கு எண்ணெய் பொருட்களை எளிதில் செல்களுக்கு இடையே ஊடுருவச்செய்யும் தன்மை கொண்டது. ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள் எண்ணெய் பசை தன்மை கொண்டதா? அவை சருமத்திற்கு பாதுகாப்பானதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கூடுமானவரை இயற்கையான மூலிகை அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லது.

சருமத்தின் வெளிப்பகுதி நீர் புகா தன்மையை கொண்டிருந்தாலும் சரும செல்களுக்கு ஈரப்பதம் தேவையானதாக இருக்கிறது. ஈரப்பதம் இல்லாவிட்டால் சருமம் வறண்டு, சரும செல்கள் இறந்துபோய்விடும். சருமம் வறண்டு போவதை தவிர்க்க குளித்த பிறகு சிறிதளவு எண்ணெய் உடலில் தடவி வருவது நல்லது.

சேதமடைந்த செல்களை சரி செய்வது, இறந்த செல்களை அப்புறப்படுத்துவது, புதிய செல்களை உற்பத்தி செய்வது, சூரிய ஒளியை வைட்டமின் டி ஆக மாற்றுவது போன்ற பணிகளையும் செய்கிறது. சருமம் உடலுக்கு கவசமாகவும் விளங்குகிறது. ஆதலால் சருமத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அவற்றுக்கு பாதிப்பு தருவதாக அமைந்து விடக்கூடாது.

மேலும் செய்திகள்