ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கம் தேவைப்பாடு 14% அதிகரிப்பு

நம் நாட்டில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கம் தேவைப்பாடு 14 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

Update: 2019-08-08 10:49 GMT
இந்தியா முதலிடம்

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.

முதல் காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) தங்கம் தேவைப்பாடு (விற்பனை) 371 டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் உயர்வாகும். இதில் ஆபரண துறையினரின் தேவைப்பாடு 289 டன்னாக உள்ளது. முதலீட்டுத் தேவை 82 டன்னாக இருக்கிறது.

இதே காலாண்டில் தங்கம் இறக்குமதி 20 டன்னாக உள்ளது. முந்தைய காலாண்டில் (ஜனவரி-மார்ச்) அது 15 டன்னாக இருந்தது. ஆக, இறக்குமதி 33 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில், மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 269 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தை விட இது 12.6 சதவீதம் அதிகமாகும்.

இறக்குமதியாகும் சுத்த தங்கத்திற்கு முதலில் மொத்தம் 13 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது (10 சதவீத இறக்குமதி வரி+3 சதவீத ஜி.எஸ்.டி). இதனை குறைக்க வேண்டும் என ஆபரண தொழில் துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தங்கம் இறக்குமதி அதிகமாக இருந்து வருவதால் மத்திய அரசு வரியை குறைக்காமலேயே இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதி வரியை (10 சதவீதத்தில் இருந்து) 12.5 சதவீதமாக உயர்த்தினார். அதனுடன் 3 சதவீத ஜி.எஸ்.டி.யும் இணைவதால் ஒட்டுமொத்த இறக்குமதி வரி 15.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஏமாற்றம்

இதனால் ஆபரண தொழில் நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன. இறக்குமதியாகும் தங்கம் மதிப்புக் கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே தங்கம் இறக்குமதியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்பதே அவர்களுடைய கருத்து. மேலும் தற்போதைய வரி உயர்வால் இத்துறை நிறுவனங்கள் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு நகை வாங்குவதை தவிர்ப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

மேலும் செய்திகள்