நதிக்குள் மோடியின் படகு மூழ்கியபோது.. - சிலிர்க்க வைக்கிறார், பியர் கிரில்ஸ்

டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12-ம் தேதி, அத்தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-08-18 07:07 GMT
கலந்துரையாடியபோது..
இதற்காக உத்தரகாண்டின் ஜிம் கார்பெட் காட்டுக்குள் பியர் கிரில்சுடன் சில மணி நேரத்தை மோடி செலவிட்டார்.இந்நிலையில் இது தொடர்பாகப் பேட்டி அளித்த பியர் கிரில்ஸ், பிரதமர் மோடி குறித்தும், அவருடன் பயணித்த அனுபவம் குறித்தும் விவரித்தார்!

‘‘நாங்கள் சென்ற ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சாதகமற்ற சூழல்கள் இருந்தபோதும், மோடி அதை மிகவும் தைரியமாக எதிர்கொண்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அவர் மிகவும் அமைதியாகவும் உற்சாகமாகவும் இருந்தார்’’ என்கிறார்.

வனப்பகுதியில் எவ்வித வெளி ஆதரவும் இன்றி உயிர் பிழைப்பதுதான் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் அடிப்படை என்றாலும், இன்று உலகை கவலைக்குள்ளாக்கும் பெரிய விஷயமான பருவநிலை மாற்றம் குறித்து மோடியும் பியர் கிரில்சும் விவாதித்தனர். அதேநேரம், சுகாதாரம், தூய்மையின் அவசியத்தையும், அதை மேம்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மோடி எடுத்துச் சொன்னாராம்.

‘எப்போதும் நீங்கள் அரசியல்வாதிகளை மேடையில்தான் சவுகரியமாக பார்த்திருப்பீர்கள். ஆனால், காடுகளுக்கு அனைவரும் ஒன்றுதான். அங்கு பயணிக்க தைரியமும் அர்ப்பணிப்பும் வேண்டும். நாங்கள் அங்கிருந்தபோது கடினமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது. கனமழை பெய்தது. ஆனால், அந்தப் பயணம் முழுவதும் அனைத்து நெருக்கடியிலும் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியாக இருந்தார் பிரதமர் மோடி. அதைப் பார்க்க நன்றாக இருந்தது. நெருக்கடியின்போதுதான் ஒருவர் யார் என்று தெரியவரும். அவரது உண்மையான குணத்தையும் அப்போதுதான் காண முடியும்.

அந்தவகையில், பயணம் முழுவதும் மோடி அலட்டிக்கொள்ளாமல் இருந்தார். கடுமையான மழை நேரத்திலும்கூட அவர் முகத்தில் புன்னகையை பார்க்க முடிந்தது. இது ஒரு சாகச நிகழ்ச்சி என்றபோதும் பிரதமரின் பாதுகாப்பில் அவரது பாதுகாப்புப் படையினர் மிக கவனமாக இருந்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது நாங்கள் பெரிய பாறைகளையும், தொடர் மழையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மழையின்போது அவர்கள் பிரதமருக்காக குடையை எடுக்க முயற்சித்தபோது, ‘இல்லை... தேவையில்லை’ என்று அவர் கூறிவிட்டார்.

நாங்கள் காட்டுக்குள் பயணித்து, நதியை அடைந்தோம். அங்கு கிடைத்த நாணல் போன்ற வற்றையும், தார்பாலினையும் கொண்டு நான் ஒரு சிறு படகைத் தயார் செய்தேன். அதை வைத்து நதியை கடந்துவிடலாம் என்று நான் நினைத்தபோது, அதில் பிரதமர் மோடி பயணிக்க அனுமதிக்க முடியாது என்று அவரது பாதுகாப்புப் படையினர் தெரிவித்துவிட்டனர். ஆனால் மோடி, ‘‘பரவாயில்லை... நாம் இருவரும் சேர்ந்து பயணிக்கலாம்’’ என்றார்.

படகில் ஏறிய அவர், என்னையும் ஏறச் சொன்னார். ஆனால், படகு மூழ்க ஆரம்பித்துவிட்டது. நான் நீந்திக் கொண்டே அவரை படகில் வைத்துத் தள்ளினேன். ஆனாலும் அவர் முழுவதும் நனைந்துவிட்டார். அப்போது பெய்த அந்த கனமழையிலும்கூட அவர் புன்னகை முகத்துடனே இருந்தார். உலகத் தலைவரான மோடி நெருக்கடியின்போது எவ்வளவு அமைதியாக இருந்து அதை எதிர்கொள்கிறார் என்பதை நேரில் பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி சைவ உணவு பழக்கம் கொண்டவர் என்பதால், காட்டில் கிடைக்கும் பூச்சி போன்றவற்றைச் சாப்பிட முடியாது. காட்டுக்குள் இருக்கிறோம் என்பதற்காகவே நாம் பூச்சி, விலங்குகளைத்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பழங்கள், செடிகள் போன்றவற்றை உட்கொண்டும் உயிர் வாழலாம். பிரதமர் தனது சிறுவயதில் காட்டுப் பகுதிகளில் இருந்திருக்கிறார் என்பதால் அவரால் அங்கு எளிமையாக, இயல்பாக இருக்க முடிந்தது.

நான் காட்டுக்குள் கிடைத்த குச்சி, என்னிடம் இருந்த கத்தியைக் கொண்டு, ஈட்டி மாதிரி ஒன்றைத் தயாரித்து மோடியிடம் கொடுத்தேன். அப்போது அவர், ‘நான் வளர்க்கப்பட்ட விதம், என்னை உயிர்களைக் கொல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் நீங்கள் வற்புறுத்துவதால், இந்த ஈட்டியுடன் ‘போஸ்’ கொடுக்கிறேன்’ என்றார்.

காடுகள், சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் மோடி. அதனால்தான் அவர் என்னுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ள ஆர்வத்துடன் முன்வந்தார். பிரதமர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதால், அவரது பாதுகாப்புக்கு நாங்களும் பொறுப்பு என்பதால் எங்கள் குழுவினர் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தனர். ஆனால் தனது எளிமை, அடக்கத்தால் எங்களையும் இயல்பாக்கிவிட்டார் மோடி. நாங்கள் செய்த எல்லாவற்றிலும் அவர் மிகவும் அமைதியாக ஒத்துழைத்தார்.

இந்தப் பயணத்தின்போது மோடியின் பாதுகாப்புப் படையினர்தான் அதிகம் கஷ்டப்பட்டுவிட்டனர். ஆயுதங்கள் போன்றவற்றை அவர்கள் சுமந்துவர வேண்டியிருந்தது. திறந்தவெளியில், காட்டுக்குள் இருப்பதால் அவரது பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.

நான் ஆரம்பத்தில் பிரதமரிடம், ‘உங்களை காட்டு விலங்குகள், மோசமான காலநிலை மற்றும் பெரும் நதியிடம் இருந்து காக்கவேண்டியது எனது வேலை’ என்று கூறினேன். அவர் என்னை முழுமையாக நம்பினார். அமைதியாக இருந்ததுடன், என் மீது அக்கறையாகவும் இருந்தார். அந்த நம்பிக்கை அடிப்படையிலான ஒத்துழைப்பால்தான் எங்களால் காட்டுக்குள் ஒன்றாகப் பயணிக்க முடிந்தது’ என்றார்.

பியர் கிரில்ஸ் இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இதுபோன்ற ஒரு சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் மோடி உடனான அவரது நிகழ்ச்சிதான் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் செய்திகள்