செப்டம்பர் மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 48% சரிவு

கடந்த செப்டம்பர் மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 48 சதவீதம் சரிவடைந்துள்ளது.

Update: 2019-10-03 07:22 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த அளவில் 36,376 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 69,991-ஆக இருந்தது. ஆக விற்பனை 48 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டில் அதன் விற்பனை 50 சதவீதம் குறைந்து 32,376-ஆக இருக்கிறது.

இதில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 47 சதவீதம் சரிந்து (46,169-ல் இருந்து) 24,279-ஆக குறைந்துள்ளது. பயணிகள் வாகன விற்பனை 56 சதவீதம் குறைந்து 8,097-ஆக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18,429-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் ஏற்றுமதி 28 சதவீதம் சரிந்து (5,250-ல் இருந்து) 3,800-ஆக குறைந்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) இந்நிறுவனம் மொத்தம் 60,093 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 98,702-ஆக இருந்தது. ஆக, விற்பனை 39 சதவீதம் சரிவடைந்து இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.118.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.119.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.113.05-க்கும் சென்றது. இறுதியில் ரூ.115.35-ல் நிலைகொண்டது. இது, திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.79 சதவீத சரிவாகும்.  

மேலும் செய்திகள்