வரலாற்றில் இந்திய-சீன உறவுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன நாட்டின் அதிபர் ஜின்பிங்கும் வருகிற 11-ந்தேதி தமிழகத்தின் உலகப்புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டின் உறவுகள், வளர்ச்சி குறித்தும் பேச இருப்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது.

Update: 2019-10-10 06:21 GMT
ந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன நாட்டின் அதிபர் ஜின்பிங்கும் வருகிற 11-ந்தேதி தமிழகத்தின் உலகப்புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டின் உறவுகள், வளர்ச்சி குறித்தும் பேச இருப்பதை உலகமே உற்று நோக்கி வருகிறது. நமது பிரதமர் இச்சந்திப்பை நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் வைக்காமல் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வைத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது மட்டுமின்றி தமிழகத் தொன்மை வரலாற்றையும் தமிழர்களின் கடல் வாணிபத் தொடர்பையும், கடல்கடந்து பல நாடுகளுடன் தமிழக அரசர்கள் கொண்டிருந்த அரசியல் தொடர்பையும் நன்கறிந்தே மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல நாடுகளுடன் கடல் கடந்து சென்று தங்களது பரவல்களை ஏற்படுத்தினர். குறிப்பாக சீன நாட்டுடன் பல நூற்றாண்டுகளாக நட்புறவுடன் விளங்கியிருந்தனர். சீனர்கள் உற்பத்தி செய்த பட்டுத்துணிகள் மேலை நாடுகளுக்கு இந்தியக் கிழக்குக் கடல் வழியாகவே சென்றன, எனவே தமிழ் மன்னர்களுடன் சீன அரசும் நட்புறவைப் பாராட்டின. காவேரிப்பூம்பட்டினத் துறைமுக நகரத்தைப் பற்றி விரிவாகப் பேசும் பட்டினப்பாலை என்னும் இலக்கியத்தில் சீனர்களின் பெருங்கப்பல்கள் தமிழகக் கடற்கரைத் துறைமுகங்களில் நங்கூரம் இட்டிருந்தமையைக் குறிப்பிடுகிறது. இக்கப்பல்கள் தூங்கு நாவாய் என வழங்கப்பட்டன. தொடர்ந்து இவ்வகை கப்பல்கள் பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசுகளின் காலத்திலும், தமிழகத் துறைமுகங்களுக்கு வந்து நங்கூரமிட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் புகழ்பெற்ற மன்னன் கிருஷ்ண தேவராயர் காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு துறைமுகத்திற்கு சீனக்கப்பலான தொங்கு கப்பலில் இருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவற்றிற்கு வரி விதிக்கப்படுகிறது. தமிழில் தூங்கு நாவாய், தொங்கு கப்பல் என்பது சீனர்களின் புகழ்பெற்ற பெரிய கப்பல்களான ‘சுங்’ வகை சரக்குக்கப்பல்களாகும்.

சீனர்களுக்கும் தமிழ் மன்னர்களுக்கும் தமிழ் வணிகர்களுக்கும், சீன வணிகர்களுக்கும் உள்ள தொடர்பு மிக மிகத் தொன்மை வாய்ந்தது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சீன அரசர் வீ என்பவர் காலத்தில் இந்தியாவுடன் சீனர்களுக்கான தொடர்பு சிறப்புற்று இருந்தது. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த சீன இலக்கியமான “சூ யின் ஹன் சூ” என்ற நூல் தமிழகத்தில் பல்லவர் தலைநகரமாக விளங்கிய காஞ்சீபுரத்தை ‘ஹுவாங் சீ’ என வழங்குகிறது. காஞ்சீபுரம் பல்லவர் தலைநகரமாக விளங்கியிருந்தாலும் மாமல்லபுரம் அவர்களது கடற்கரைத் துறைமுகமாக அக்காலத்தில் சிறப்புற விளங்கியது. சீனப்பயணி யுவாங் சுவாங் காஞ்சீபுரத்திற்கு மாமல்லபுரம் துறைமுக நகரத்திற்குக் கப்பலில் வந்திறங்கி ஆற்று வழியாகப் படகில் காஞ்சீபுரத்தைச் சென்றடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

காஞ்சீபுரத்தில் ஆட்சி புரிந்த அரசர்களுக்கு சீன அரசர் பரிசுப் பொருள்களை தங்களது தூதர்கள் மூலம் அனுப்பியுள்ளனர் என்பதை சீன ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதே போன்று சீன அரசுக்கு தங்களது தூதர்களை அனுப்பியதாக பல்லவர் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மாமல்லபுரம் அருகிலுள்ள வாயலூர் என்னும் ஊரிலுள்ள கல்வெட்டில் சீனர்களுக்கான தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. சீனர்களிடமிருந்து பட்டு நெசவுத் தொழிலை தமிழர்கள் அறிந்து கொண்டனர். காஞ்சீபுரம் பட்டு உற்பத்தியில் மிகச் சிறந்த நகரமாக விளங்கத் தொடங்கியது. தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் சீனர்களின் பழமையான புகழ்பெற்ற மட்கல வகையான செலடன் எனப்படும் மட்கல வகை கிடைத்துள்ளது. அத்துடன் சீனக் காசுகளும் கிடைத்துள்ளன.

காஞ்சீபுரம் பவுத்த மதத்தின் மடாலயங்களைக் கொண்டிருந்தது. இங்கிருந்த பல்கலைக்கழகத்தில் பல அயல் நாட்டினர் படித்தனர். காஞ்சீபுரத்தைச் சார்ந்த தர்மபாலர் என்பவர் நாளாந்தா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமனம் பெற்றார். இப்பல்கலைக்கழகத்தில் சீனர்கள் பலர் கற்றனர். இவர்கள் வழியாக தமிழகத்தின் பெருமை சீனாவில் பேசப்பட்டது. காஞ்சீயிலிருந்து போதிதர்மர் சீனாவிற்குச் சென்று வர்மக்கலையை சீனர்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியக் கலைகள் பல இக்காலத்தில் சீனாவிற்குச் சென்றன. சீன அரசர் நாகப்பட்டினத்தில் சீனர்கள் வழிபடுவதற்காக பவுத்தப்பள்ளி ஒன்றைக் கட்ட பல்லவர்களின் அனுமதியைக் கோரினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று பல்லவ மன்னன் நாகப்பட்டினத்தில் பவுத்தப்பள்ளி அமைக்க அனுமதி வழங்கினார். பல்லவர்கள் கால வணிகர்களும் சீனாவின் பல நகரங்களில் கோவில்கள் பல கட்டினர். சீனாவிற்கும், தமிழ் நாட்டிற்கும் உள்ள தொடர்பு சோழர் காலத்திலும் நீடித்தது. தமிழ் வணிகர்கள் குழுக்களாக சீனாவில் குடியேறினர்.

சீனர்களின் “சுங்ஷிஹ் சுங் ஹுய் யவோ” என்னும் ஆவணக் குறிப்பில் சோழர்கள் தங்களது தூதர்களை சோழர் ஆட்சிக்காலத்திலும் அனுப்பியுள்ளனர். குறிப்பாக மாமன்னன் ராஜராஜ சோழன் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோர் சீனாவிற்கு நல்லுறவு தூதர்களை அனுப்பினர். பல்லவர் காலத்தில் சீனர்கள் கட்டியிருந்த நாகப்பட்டின பவுத்த விகாரையை சீன அரசர் க்சியான்சுன் என்பவர் 1267-ம் ஆண்டு மிக உயர்ந்த மாடங்களை வைத்து திருத்தி கட்டுகிறார். இந்த பவுத்த விகாரையின் ஸ்தூபி செங்கல்லாலும், சுதையாலும் கட்டப்பட்டது. பிரமிடு அமைப்பில் பல தளங்களையுடைய இத்தூபியை 1846-ம் ஆண்டு வால்டர் எலியட் என்னும் ஆங்கிலேயர் பார்வையிட்டு அக்கட்டிட அமைப்பை வரைபடமாக வரைந்துள்ளார். இது “சீன பகோடா” எனப்பட்டது. சீன நகரமான குவாங்சூ (சைடோன்) என்ற இடத்தில் தமிழ் மற்றும் சீன மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன.

கி.பி 1281 -ம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று இவ்வூரில் சிவனுக்கான கோவில் ஒன்று கட்டப்பட்டதைக் குறிப்பதுடன் சீன அரசர் குப்ளாய்கான் நலனுக்காக வேண்டுதல் செய்யப்பட்டு நிவந்தங்கள் அளிக்கப்பட்ட செய்தியையும் குறிக்கிறது. இக்கல்வெட்டில் குப்ளாய்கான் மன்னர் செகசேகான் என வழங்கப்படுகிறார். கோவிலின் இறைவன் பெயரும் இவரது பெயரில் வழங்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் சீன எழுத்துக்கள் உள்ளன. இடிபாடுடன் இருந்த இக்கோவிலில் 5 மீ உயரமுடைய லிங்கத் திருமேனி, திருமால், நரசிம்மர், கங்காதரர், புல்லாங்குழலுடன் உள்ள கிருஷ்ணர், காலியமர்த்தனர் ஆகிய சிற்பங்களும், தமிழ்நாட்டுக் கோவில்களின் தூண் அமைப்புகளும் உள்ளன,

இதன் மூலம் சீன அரசர்களுடன் தமிழர்கள் கொண்டிருந்த நெருங்கிய நட்பை அறிய முடிகிறது. யாதும் ஊரே யாவரும் கேளர் என்ற கணியன் பூங்குன்றனாரின் உலக நட்புறவு வாக்கியத்திற்கு ஏற்ப தமிழர்கள் சீன நாட்டின் மன்னரின் நலனிற்காக வேண்டுதல் செய்தமை இக்கல்வெட்டின் மூலமும் உலக நாடுகளுக்கு எங்கு சென்று வாழ்ந்தாலும் தாய் நாட்டின் மீதும் தாம் சென்ற நாட்டின் மீதும் நீங்கா பற்று கொண்டவர்களாக தமிழர்கள் விளங்கியமையையும் அறிய முடிகிறது.

சு.ராஜவேலு, வருகைப் பேராசிரியர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

மேலும் செய்திகள்