நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 1,890 கோடி டாலராக அதிகரிப்பு

நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 1,890 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Update: 2019-10-16 06:33 GMT
தங்கம் இறக்குமதி
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் ஆபரண வடிவமைப்பு, வைரங்களை அறுத்தல், பட்டை தீட்டுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் நம்மிடம் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் வாங்குகின்றன. இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில் 1,890 கோடி டாலருக்கு நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 7.6 சதவீத சரிவாகும். இதே காலத்தில் தங்கம் ஆபரணங்கள் ஏற்றுமதி 0.7 சதவீதம் உயர்ந்து 610 கோடி டாலராக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில்...
செப்டம்பர் மாதத்தில் மட்டும் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 6.2 சதவீதம் குறைந்துள்ளது. அந்த மாதத்தில், அறுத்து மற்றும் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி 17.8 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. எனினும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 13 சதவீதம் உயர்ந்து சுமார் 100 கோடி டாலராக இருக்கிறது.

இறக்குமதி வரி
மத்திய அரசு முதலில் இறக்குமதியாகும் சுத்த தங்கத்திற்கு 13 சதவீத வரி விதித்து வந்தது (10 சதவீத இறக்குமதி வரி+3 சதவீத ஜி.எஸ்.டி). இவ்வளவு வரி விதித்தும் தங்கம் இறக்குமதி அதிகமாகவே இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதி வரியை (10 சதவீதத்தில் இருந்து) 12.5 சதவீதமாக உயர்த்தினார். இதனுடன் 3 சதவீத ஜி.எஸ்.டி.யும் சேர்த்து ஒட்டுமொத்த வரி 15.5 சதவீதமாக இருக்கிறது.

மேலும் செய்திகள்