அரசு துறைகளும், மக்கள் தொடர்பும்

‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 75 வருஷம் ஆகப் போவுது... இன்னமும் நம்ம ஜனங்களுக்கு மரியாதை கிடைச்ச பாட்டைக் காணோம்..

Update: 2019-10-19 06:05 GMT
‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சு 75 வருஷம் ஆகப் போவுது... இன்னமும் நம்ம ஜனங்களுக்கு மரியாதை கிடைச்ச பாட்டைக் காணோம்.. ‘அரசு அலுவலக வாயிலில், இப்படிச் சிலர் சொல்ல காதுபட கேட்கலாம். பல தருணங்களில், இதனை வெளியில் சொல்லக்கூட முடியாமல் மனதுக்குள் பொருமிக்கொள்பவர்கள் ஏராளம்.

அனேகமாக, நாம் அனைவருமே இதனை ‘அனுபவித்து’ இருக்கிறோம். எந்தவொரு அரசு அலுவலகத்துக்குப் போனாலும், சாமானியன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சங்கடமே, அவனது தன்மானத்துக்கு விடப்படுகிற சவாலை எதிர்கொள்வதுதான். கீழ்மட்ட பணியாளர் முதல்

உயர்நிலை அதிகாரிகள் வரை, ‘எடுத்தெறிந்து’ பேசுவதை, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்; வேறு வழியில்லை.

ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை, தூய நிர்வாகம் என்றெல்லாம் முழங்குகிற பெரிய மனிதர்கள் யாரும்,‘இன்முகம்’, ‘கனிவான பேச்சு’, ‘மனிதாபிமான வழிகாட்டுதல்’ குறித்தெல்லாம் வாய் திறப்பதே இல்லை. காரணம், இவர்களில் யாரும் கடைக்கோடி மனிதனின் ‘கஷ்டத்தை’ அனுபவித்தது இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இதே நிலை...? இதற்கு ஒரு முடிவு கிடையாதா? நமக்கு ஒரு விடிவு வராதா...?

‘மக்கள் தொடர்பு’ அரசுப் பணிகளில் அத்தியாவசியப் பிரிவு. ஒரு தகவல், ஒரு வழிகாட்டி குறிப்பு, ஒரு சிறிய ஆறுதல்... அரசுத் துறைகளில் எத்தனை பேருக்கு அத்தனை எளிதில் கிடைத்து விடுகிறது...? இந்தியர்கள், அதிலும் தமிழ் மக்கள், சற்றே கனிவாக ஓரிரு சொற்கள் பேசினாலே, உச்சி குளிர்ந்து போய் விடுபவர்கள்.

‘ரொம்ப நல்ல மனுஷனா இருக்காரு... அவரும்தான் பாவம் என்ன பண்ணுவாரு..?’ என்று வெள்ளந்தியாய் கேட்கிற மக்களை, கால் கடுக்க நிற்க வைத்து, கண் கலங்க அனுப்பி வைக்கிறோம். என்னதான் நடக்கிறது நம் நாட்டில்...? ஏன் இந்த அவல நிலை தொடர்கிறது..?

மக்கள் தொடர்பு என்கிற கருத்துருவே இன்னமும் பலருக்குப் பிடிபடவில்லை. கோப்புகளைப் பார்த்து, விதிமுறைகளைப் படித்து, உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை முடித்து, எழுதுகிறவர்கள்’ மட்டும்தான் ‘சிறந்த’ பணியாளர்; அவர்தான் ‘நல்ல’ அலுவலர்.

பொதுமக்களின் குறை கேட்டு அவர்களுக்கு உடனடியாகத் தீர்வு காண்கிற அல்லது சொல்கிற பணியை யாரும், பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. இது மிக முக்கியம் என்கிற உணர்வு கூட எந்த மட்டத்திலும் காணப்படுவதில்லை. இதுவும் ஒருவகையில் அறியாமைதான். உடனடியாக மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.

அரசுப் பணியாளர்-அலுவலர், தனது உயர் அதிகாரிக்கு எந்த அளவுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவரோ, அதே அளவுக்கு அல்லது அதை விடவும் அதிகமாக, பொதுமக்களுக்கும் கடமைப்பட்டவர். உடனடியாக செய்ய வேண்டியது என்ன...? ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், அன்றாடம் புதுப்பிக்கப்பட்ட செய்திகளுடன், தகவல் பலகை கட்டாயம் இருத்தல் வேண்டும். அலுவலக வாசலிலேயே மக்கள் தொடர்பு அலுவலர்-பணியாளர் அமர்த்தப்பட வேண்டும். பொதுமக்களிடமிருந்து இவர் பெறும் விசாரணைக்கு, உள்ளே இருக்கிற, மூத்த உயர் அதிகாரிகள் முதல் அனைவரும், முன்னுரிமை தந்து, தக்க பதில் தரவேண்டும்.

இந்த ஏற்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறை அலுவலகத்தின் முதன்மைப் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பு. இதற்கான சுற்றறிக்கையை மத்திய-மாநில அரசுகளின் துறைத் தலைவர்கள் உடனடியாகப் பிறப்பித்து, கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் தொடர்பு தனிச்சிறப்பு வாய்ந்த பணி. ஒரு துறையின் செயல்பாடுகள், பணி புரிவோர் பற்றிய விவரங்கள், சில அடிப்படை விதிமுறைகள், ஒவ்வொரு வேலைக்குமான வழிமுறைகள் குறித்து நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு, இனிமையாகப் பேசி, விளக்குதல் வழிகாட்டுதல் அத்தனை எளிது அல்ல.

மக்கள் தொடர்புக்கு, பணியாளர்கள்-அலுவலர்கள், பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆனால், இப்படி ஒரு பயிற்சி, எந்தத் துறையிலும் தனியே வழங்கப்படுவதில்லை. அதை விடவும் கொடுமை தவறு செய்து விட்டவரை அமர்த்துவதற்கான, ‘தண்டனை’ நியமனமாக இந்தப் பணியிடம் மாற்றப்பட்டுள்ளது.

அரசு அலுவலகத்தின் உள்ளே சென்று, யாரையேனும் சந்தித்துப் பேசுவது என்றாலே... ஒரு வித தயக்கம், அச்சம் பொதுவாக எல்லோரிடத்திலும் இருக்கவே செய்கிறது. இதிலே, பெரியவர், சிறியவர், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர்... எந்த பாகுபாடும் இல்லை. அரசுத்துறையில் இருந்து ‘தகவல்’ பெறுவதும் இப்படித்தான். மிகவும் சவாலான பணி.

ஊடகங்கள் உள்ளிட்ட யாரும் அத்தனை சுலபத்தில் எந்தச் செய்தியும் பெற்று விட முடியாது. ஏன் இந்த இறுக்கம்..? எதற்காக இந்த ஒளிவு மறைவு..? ஒரு ஜனநாயகக் குடியரசில், மக்களுக்கு தெரியக்கூடாத செயல் என்று எதுவும் அரசு அலுவலகத்தில் இருத்தல் கூடுமா...? ஒரு நடவடிக்கைக்கு முன்பாகத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நடவடிக்கை தொடங்கிய பிறகு, அல்லது, நிறைவுற்ற பிறகும் கூட, அதுகுறித்த செய்திகள் எப்படி ‘ரகசியம்’ ஆகும்..? ஒரு மிக முக்கிய துறையில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாதது. உயர் அதிகாரிகள் தந்த ஆதரவு, அறிவுரைகள் ஓர் இனிய ஆச்சரியம்.

‘முதல்ல, வந்திருக்கிற மக்களைப் பாருங்க... மீதி எல்லாம் அப்புறம்... ‘ஏராளமான இளைஞர்கள், சான்றுக் கையொப்பம் கேட்டு வந்தனர்.

சிறிது நாட்களில் எந்தக் காரணமும் இன்றியும் வரத் தொடங்கினர். கேட்டால், ‘இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருந்துச்சி...

அப்படியே இங்க வந்து உங்களையும் பார்த்துப் பேசிடலாம்னுதான் வந்தேன்... ‘இதுதான் நம் மக்களின் இயல்பு.

தினைத் துணை நன்று செயினும், பனைத் துணையாய்க் கொள்ளும்’ மாண்பு.

இறுக மூடிய அறைகள், வாயிற் காவலர்கள், தேவையற்ற விசாரணைகள், காரணம் சொல்லப்படாத காத்திருப்புகள்...

அறவே அகற்றப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் இன்னும் ‘அகலமாக’ திறக்கப்பட வேண்டும்.

அலுவலர்களின் அணுகுமுறைகள் வெகுவாக மேம்பட வேண்டும். அரசு தருகிற ஊதியத்தின் பலன் மக்களுக்கு சலுகையாக அல்ல; அவர்களின் உரிமையாகத் திரும்பி வந்தால் மட்டுமே, நாம் வாழ்வது நாகரிக சமுதாயம் என்று அர்த்தம்; ஜனநாயக நெறிமுறைகள் உயிர்ப்புடன் இருப்பதாகப் பொருள். வருக... வருக.. என்று இன்சொல்லுடன் அரசு வாயில்கள் திறக்கட்டும். சாமானியனின் வாழ்க்கை, ‘சிரமம்’ இன்றி, சிறக்கட்டும்.

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அலுவலர்

மேலும் செய்திகள்