பாரம்பரிய சின்னங்கள்: பழமையான பல்கலைக்கழகம்

சீனத்துறவியான ஹாயூன் டிசாங் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் டக்சிலா எனும் செழிப்பான வளர்ச்சி கொண்ட நிலப்பரப்பு ஒன்றை உருவாக்கினார். அங்கு நீரூற்றுகள் நிரம்பி இருந்தன.

Update: 2019-11-01 14:15 GMT
பயிர்களும், பழமரங்களும் செழித்து வளர்ந்தன. இங்கு போதனைக்கூடங்களும் செயல்பட்டன.இப்போது இந்த இடம் புதையுண்ட, வெறும் கூரையற்ற கட்டிடங்களும், சுவர்களும் கொண்ட பகுதியாக காட்சியளிக்கின்றன. 

ஒருகாலத்தில் டக்சிலா உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக இருந்துள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் சமஸ்கிருத பெயர், தட்சசீலம் எனப்படுகிறது. இதற்கு ‘பாம்புகளின் இளவரசன்’ என்று பொருளாகும். கிரேக்கர்களும், ரோமானியர்களும் இதை ‘தக்சிலா’ என அழைத்தார்கள். இதன் சீனர்கள் ‘ஷூ-சா-ஷி-லோ’ என்று அழைத்தனர்.

அர்த்தசாஸ்திரம் எழுதிய கவுடில்யர், சமஸ்கிருத இலக்கண புலவரான பணினி மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையை உருவாக்கிய சரகர் ஆகியோர் தட்சசீல பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

தட்சசீல பல்கலைக்கழகம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. மூன்று முக்கிய வணிகப் பாதைகள் சந்திக்கும் இடத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் பெர்சியா இந்த பகுதியை ஆக்கிரமித்தது. அலெக்சாண்டர் கி.மு. 327-ல் இங்கு படையெடுத்து வந்தார். பின்னர் மவுரியர்கள் கட்டுப்பாட்டிற்கு வந்தது. புத்த மதம் அறிமுகமான பின்பு அசோகரின் ஆளுமையின் கீழ் இருந்தபோது இந்த பல்கலைக்கழகம் மேம்பாடு செய்யப்பட்டது.

‘தரமாஜிகா ஸ்தூபி’ இங்கு ஒரு நினைவுச்சின்னமாக எழுப்பப்பட்டது. அது 15 மீட்டர் உயரமும், 50 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது. இன்றும் இந்த நினைவுச் சின்னம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு பல்வேறு அரசர்கள் பயன்படுத்திய நாணயங்கள் தோண்டியெடுக்கப்பட்டு உள்ளன.

பீர்மவுண்ட் என்ற இடத்தில் நடந்த முதல் அகழாய்வின்போது இந்த நகரம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் அதிகம் திட்டமிடாமல் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிர்காப் என்ற இடத்தை அகழாய்வு செய்தபோது அங்கு உயர்ந்த மதில் சுவர்களும், நேரான முதன்மை தெருக்களும், ராஜ அரண்மனையும், கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் புகழ்பெற்ற இரட்டைத்தலை கழுகு கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தட்சசீல பல்கலைக்கழகம் படையெடுப்பாளர்களால் மிகவும் பாதிப்படைந்தது. அவர்கள் இதன் வழியாகவே இந்தியாவுக்கு சென்றனர். ஒவ்வொரு படையெடுப்பாளர்களும் தட்சசீல பல்கலைக்கழகத்தை சூறையாடினார்கள். கி.மு. 5-ம் நூற்றாண்டில் ஹன் படையெடுப்பிற்குப் பின் இந்த பல்கலைக்கழகம் முற்றிலும் சிதைந்துபோனது. செயல்இழந்தது.

1980-ல் பழமையான இந்த பல்கலைக்கழகம் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்