தினம் ஒரு தகவல் : செயற்கை மழையில் சீனா சாதனை

உலகிலேயே மிக அதிக பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்கும் முயற்சியில் சீனா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை பெரிய அளவில் திபெத் பீடபூமியில் அமைத்துள்ளது.

Update: 2019-11-11 04:48 GMT
திபெத் பீடபூமி உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி. பத்தாயிரக்கணக்கான எரி உலைகள் திபெத்திய மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்த பகுதியில் மிக அதிக மழைப்பொழிவை பெற முடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

இந்த திட்டம் 16 லட்சம் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.

2016-ம் ஆண்டு சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய தியான்ஹே திட்டத்தின் விரிவாக்கமே இவ்வளவு பெரிய முயற்சி. சீனாவில் தியான்ஹே என்பதற்கு வான் நதி என்று பொருள். அதே பெயரிலேயே இந்த திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம் முழு வெற்றி பெற்றால் சீனாவின் ஒரு ஆண்டிற்கான குடிநீர்த் தேவையில் 7 சதவீதம் இதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்கின்றனர். அவர்கள் எந்த முறையில் செயற்கை மழையினை உருவாக்கப் போகிறார்கள்? அது எப்படி சாத்தியம் என பலருக்குள்ளும் கேள்விகள் இருக்கும். மேக விதையூட்டல் எனும் முறையின் மூலம் வானிலையில் மாற்றம் செய்து மழையை பெறுவதுதான் செயற்கை மழை.

இன்னும் விரிவாக சொல்லப் போனால் பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்களில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பருவக்காலங்களில் மேகங்கள் குளிர்ந்த காற்றின் மூலமோ அல்லது புற விசையின் மூலமோ மழையாக பொழிகிறது. இந்த இயற்கையான முறையில் செயற்கையாக சில ரசாயன பொருட்களை மேகங்களில் கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள். பொட்டாசியம் நைட்ரேட், சில்வர் அயோடைடு அல்லது கால்சியம் குளோரைடு போன்ற வேதி பொருட்களில் ஏதேனும் ஒன்றை மேகங்களில் தூவினால் மேகத்தின் எடை அதிகரித்து மழையை வரவழைக்கலாம். இந்த தொழில்நுட்பத்தை எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த முடியாது. மழை பெய்யும் வாய்ப்பு இருக்கும் போது இந்த முறையினை பயன்படுத்தி மேகங்களை மேலும் செறிவூட்டி அதிகமான மழையை பெறலாம். இந்த முறையைத்தான் சீனா பயன்படுத்துகிறது. வழக்கமாக பெய்யும் மழையினைவிட அதிகமான மழைப்பொழிவை இதன் மூலம் பெற முடியும்.

திபெத்திய பீடபூமியின் வானிலையில் மாற்றம் செய்து மழையை பெறும் இந்த திட்டம் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு. இதன் மூலம் சீனாவில் தண்ணீர் நெருக்கடி இல்லாமல் செய்துவிடலாம் என்கிறார் இந்த திட்டத்தை மேம்படுத்தி வரும் சீன விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லெய் பன்பெய். இது சீனாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்திற்கே வளங்களை கொடுக்கும் முக்கிய கண்டுபிடிப்பாகவும் இருக்கும் என்றும் சொல்கிறார். ஆனால் இவ்வளவு பெரிய திட்டத்தை சிலர் எச்சரிக்கவும் செய்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் வானிலை மாற்றத்தில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கின்றனர்.

ஏற்கனவே துபாயிலும், ரஷியாவிலும் இந்த முறையில் மழை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அதிகப்படியான மழை பொழிவையும் பெற்றுள்ளனர். ஆனால் இதற்காக ஆகும் செலவு அதிகமாக இருப்பதால், பெரிய அளவில் இதை முயற்சி செய்யவில்லை. ஆனால் சீனா இந்த முயற்சியில் துணிந்து இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்